2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேற்கிந்திய அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2015 ஜனவரி 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா - மேற்கிந்திய அணிகளுக்கிடையில் போர்ட் எலிசபெத்தில் இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென்னாபிரிக்க அணிக்கெதிராக 9 வருடங்களின் பின்னர் பெற்ற வெற்றி இதுவென்பது சிறப்பானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடும்படி தென்னாபிரிக்காவைப் பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டேவிட் மில்லர், 133 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 130 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

மேற்கிந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் ஜசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும் ஷெல்டன் கொட்ரல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்களுடன் சரிந்தபோதிலும் இடைநிலை வீரர்களின் நிதானமான துடுப்பாட்டம் காரணமாக 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது (266 ஓட்டங்கள்).

மார்லன் சாமுவெல் 68 ஓட்டங்களுடனும் டரென் சம்மி 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நிதானமாக, தனிமனிதனாக துடுப்பெடுத்தாடிய அன்ரே ரஸ்ஸல், ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்றார். இதில், 5 ஆறு ஓட்டங்களும் 5 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

தென்னாபிரிக்க அணி சார்பில் போல் டுமினி, பர்ஹான் பிஹார்டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக அன்ரே ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரின் நிலை 3 இற்கு 1 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா வசமிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .