2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா: பகல் - இரவு டெஸ்ட் நாளை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 23 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. அடிலெய்டில் இடம்பெறவுள்ள இப்போட்டி, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக இடம்பெறவுள்ளதோடு, இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இந்தத் தொடரைக் கைப்பற்றுவது உறுதி என்ற போதிலும், தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸி, இனிப்பைப் பயன்படுத்தி பந்தை மினுக்கினார் என்ற குற்றச்சாட்டில் குற்றமிழைத்தவராக இனங்காணப்பட்ட பின்னணியில், இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முதலாவது பகல் - இரவு டெஸ்ட், அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 2015ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற அதே அடிலெய்ட் மைதானத்தில், 3ஆவது பகல் - இரவு டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது.

முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர், அதிக எண்ணிக்கையான மாற்றங்களை ஏற்படுத்திய அவுஸ்திரேலிய அணி, அறிமுக வீரர்கள் மூவருடன் களமிறங்கவுள்ளது. இளம் இரத்தம் பாய்ச்சப்பட்டுள்ள இந்த அணி, தென்னாபிரிக்காவுக்குச் சவாலை வழங்குமா என்பதிலேயே கேள்வி காணப்படுகிறது. இப்போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி டேவிட் வோணர், மற் றென்ஷோ, உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப், நிக் மடின்சன், மத்தியூ வேட், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் விளையாடவுள்ளதாக, அணித்தலைவர் ஸ்மித் அறிவித்தார்.

தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரை, 2ஆவது போட்டியில் விளையாடிய 11 பேரில் மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படவில்லை. அவ்வாறு மாற்றம் ஏற்படுமாயின், சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜுக்குப் பதிலாக, புறச்சுழல் பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணி: ஸ்டீவன் குக், டீன் எல்கர், ஹஷிம் அம்லா, ஜேபி டுமினி, ஃபப் டு பிளெஸி, தெம்பா பவுமா, குயின்டன் டீ கொக், வேர்ணன் பிலாந்தர், கைல் அபொட், கஜிஸ்கோ றபடா, கேஷவ் மஹராஜ்/தப்ரைஸ் ஷம்சி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .