2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவுக்குப் போட்டி; தென்னாபிரிக்காவுக்குத் தொடர்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 27 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், தொடரின் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில், பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியின் 4ஆவது நாளான இன்று, 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களுடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 250 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனியாக நின்று போராடிய ஸ்டீவன் குக், தனது 2ஆவது சதத்தைப் பெற்று, 10ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

தமக்கு வழங்கப்பட்ட 127 என்ற இலகுவான இலக்கை, அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது. இதில், விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, முதலாவது விக்கெட்டாக டேவிட் வோணரை, ரண் அவுட் முறையில் இழந்திருந்தது. 

ஏற்கெனவே இலங்கைத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளையும் தோற்ற அவுஸ்திரேலிய அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலிரு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றதைத் தொடர்ந்து, அதிக மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி, 3 அறிமுக வீரர்கள் அழைக்கப்பட்டதோடு, விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட், வேகப்பந்து வீச்சாளர் ஜக்ஸன் பேர்ட் ஆகியோரும் மீள அழைக்கப்பட்டனர்.   சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையனும், இப்போட்டியிலிருந்து நீக்கப்பட இருந்த போதிலும், அவருக்குப் பதிலாக விளையாடவிருந்த ஸ்டீவன் ஓஃப் கீ, காயமடைந்தமையின் காரணமாக, தனது இடத்தைத் தக்க வைத்தார். அவ்வாறு தப்பித்த லையன், இப்போட்டியில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். 

இவ்வாறு, இளைய வீரர்களுடன் புதிய ஆரம்பமொன்றைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, தொடர்ந்தும் எதிர்காலத்தில் எவ்வாறான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. மறுபக்கமாக தென்னாபிரிக்காவில், இளம் வேகப்பந்து வீச்சாளர் கஜிஸ்கோ றபடா, இளம் சுழற்பந்து வீச்சாளர் மஹராஜ் ஆகியோர், அவ்வணியின் அடுத்த சில ஆண்டுகளுக்கான நம்பிக்கையை வழங்குகின்றனர். 

இப்போட்டியின் நாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக தென்னாபிரிக்காவின் வேர்ணன் பிலாந்தர் தெரிவானார்.   

ஸ்கோர் விவரம்...

தென்னாபிரிக்கா: 259/9 (துடுப்பாட்டம்: /பப் டு பிளெஸிஸ் ஆ.இ 118, ஸ்டீவன் குக் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேஸல்வூட் 4/68, ஜக்ஸன் பேர்ட் 2/57, மிற்சல் ஸ்டார்க் 2/78)

அவுஸ்திரேலியா: 383/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 145, ஸ்டீவன் ஸ்மித் 59, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் 54, மிற்சல் ஸ்டார்க் 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் அபொட் 3/49, கஜிஸ்கோ றபடா 3/84, வேர்ணன் பிலாந்தர் 2/100(

தென்னாபிரிக்கா: 250/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவன் குக் 104, ஹஷிம் அம்லா 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்சல் ஸ்டார்க் 4/80, நேதன் லையன் 3/60, ஜொஷ் ஹேஸல்வூட் 2/41)

அவுஸ்திரேலியா: 127/3 (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 47, ஸ்டீவன் ஸ்மித் 40, மற் றென்ஷோ ஆ.இ 34 ஓட்டங்கள்.)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .