Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணியை உருட்டி எடுத்தது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலாவது போட்டியில் பங்குபற்றிய அணியிலிருந்து மிலிந்த சிரிவர்தன, லக்ஷான் சந்தகான் ஆகியோர் நீக்கப்பட்டு, தனுஷ்க குணதிலக, சீக்குகே பிரசன்ன ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், குசல் மென்டிஸ் (69 பந்துகளில் 69 ஓட்.), அஞ்சலோ மத்தியூஸ் (60 பந்துகளில் 57 ஓட்.), குசல் பெரேரா (53 பந்துகளில் 54 ஓட்.), டினேஷ் சந்திமால் (67 பந்துகளில் 48 ஓட்.) ஆகியோரின் சிறப்பான பங்களிப்புகளின் உதவியுடன் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அடம் ஸாம்பா, மிற்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஃபோக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
289 என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இரண்டாவது ஓவரின் முதலாவது பந்திலேயே டேவிட் வோணரை இழந்ததோடு, 2 விக்கெட்டுகளை இழந்து 16 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களுடன் ஓரளவு போராடிய போதிலும், பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 82 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தனித்து நின்று போராடிய மத்தியூ வேட் 76 (88) ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ட்ரவிஸ் ஹெட் 31 (48), ஸ்டீவன் ஸ்மித் 30 (33) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சிறப்பாகப் பந்துவீசிய அமில அபோன்ஸோ, 9.2 ஓவர்களில் 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர திஸர பெரேரா 3 விக்கெட்டுகளையும் அஞ்சலோ மத்தியூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவானார்.
54 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
14 Apr 2026