Editorial / 2017 ஜூன் 06 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், அவுஸ்திரேலிய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டி, மழை காரணமாக, முடிவுகள் பெறப்படாது கைவிடப்பட்டது.
பேர்மிங்காவில், பகல் - இரவுப் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், 4ஆவது விக்கெட்டுக்காக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலும் சிரேஷ்ட வீரர் ஷகிப் அல் ஹஸனும், 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும், அதன் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்த அவ்வணி, குறைந்த ஓட்டங்களுக்கே வீழ்ந்தது.
துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால், 114 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பெற்றார். இந்தத் தொடரின் முதலாவது போட்டியில், சதமொன்றைப் பெற்ற தமிம், இப்போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை, மயிரிழையில் தவறவிட்டார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் இருவர் மாத்திரமே, இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றனர். ஷகிப் அல் ஹஸன் 29 (48), மெஹெடி ஹஸன் மிராஸ் 14 (26) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார் 8.3 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, அடம் ஸாம்பா, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டி மீள ஆரம்பிக்கப்பட முடியவில்லை.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், டக் வேர்த் லூயிஸ் முறையை அமுல் செய்வதற்கு, குறைந்தது 20 ஓவர்கள் வீசப்பட வேண்டுமென்ற நிலையில், மேலதிகமாகத் தேவைப்பட்ட 4 ஓவர்களை வீச முடியாது போனது. 20 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருந்தால், போட்டியில் வெற்றிபெறுவதற்குத் தேவையான ஓட்டங்களை, அவுஸ்திரேலியா, ஏற்கெனவே பெற்றிருந்தது. ஆனால், 20 ஓவர்களும் வீசி முடிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில், அவ்வணியால் வெற்றிபெற முடியவில்லை.
துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 40 (44), 22 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
அவுஸ்திரேலிய அணியின் முதலாவது போட்டியில், நியூசிலாந்தை அவ்வணி எதிர்கொண்டிருந்த நிலையில், அப்போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய போது, மழை காரணமாக, போட்டி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago