2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அஸ்டன் வில்லாவை வாங்குகிறார் சீனர்

Shanmugan Murugavel   / 2016 மே 19 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்டன் வில்லா கால்பந்தாட்டக் கழகத்தை, சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்குவதற்குச் சம்மதித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது. 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு வாங்குவதற்கே அவர் சம்மதித்துள்ளார்.

கலாநிதி டொனி ஸியா என்ற அந்த சீனத் தொழிலதிபர், இக்கழகத்தை வாங்குவதற்கான அனுமதி, கால்பந்தாட்ட லீக்கினால் வழங்கப்பட்டவுடன், இந்த விற்பனை உத்தியோகபூர்வமாகும்.

2006ஆம் ஆண்டில் 62.2 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு அஸ்டன் வில்லா கழகத்தை வாங்கிய அமெரிக்க கோடீஸ்வரரான றன்டி லேர்னர், அக்கழகத்தை விற்பனை செய்யவுள்ளதாக 2014ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார்.

குறிப்பாக, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் இம்முறை மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா, அத்தொடரிலிருந்து தரமிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விற்பனை முக்கியம் பெறுகிறது.

இது தொடர்பாகக் கழகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், 'கழகத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளக்கூடியதும் கழகத்தின் சிறப்பான தன்மையை மீளக்கொண்டுவரக்கூடியதுமான சரியான உரிமையாளரை" லேர்னர் தேடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதற்கு ஸியா மிகச்சிறப்பான தெரிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்டன் வில்லா கழகத்தின் முகாமையாளரும் அண்மையில் பதவி விலக்கப்பட்டிருந்த நிலையில், புதிய பயிற்றுநரும் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நைஜல் பியர்ஸன் அல்லது றொபேர்ட்டோ டி மாட்டியோவே இவ்வாறு நியமிக்கப்படுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .