2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆஸியைப் பயிற்றுவிக்கிறார் கிலெஸ்பி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 29 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக, அவ்வணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் யோர்க்‌ஷையர் பிராந்திய அணியின் முன்னாள் பயிற்றுநருமான ஜேஸன் கிலெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடர், 22ஆம் திகதியே நிறைவடையவுள்ளது. ஆனால், இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 23ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளது.

முக்கியமான அந்தத் தொடருக்குத் தயார்படுத்தல்களில் ஈடுபடுவதற்காக, வழக்கமான பயிற்றுநர் டெரன் லீமன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். அதன் காரணமாக இலங்கைத் தொடருக்கு, ஜஸ்டின் லாங்கரே பதில் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஜஸ்டின் லாங்கரின் உதவிப் பயிற்றுநராகவே, ஜேஸன் கிலெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் எதிர்காலப் பயிற்றுநர்களாக இருக்க வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் இரண்டு பேரான ஜஸ்டின் லாங்கரும் ஜேஸன் கிலெஸ்பியும், ஒரே தொடரில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யோர்க்‌ஷையர் அணிக்கு வெற்றிகரமான பயிற்றுநராகச் செயற்பட்ட கிலெஸ்பி, தனக்குக் கிடைத்த வாய்ப்புத் தொடர்பில், குறிப்பாக தனது முன்னாள் சக வீரரான லாங்கருடன் பணியாற்றவுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது, "ஜஸ்டின் லாங்கருடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, அற்புதமானது. அவர் என்னுடைய நண்பரும் முன்னாள் சக வீரரும் தான். ஆனால், இந்த வகைப் போட்டிகளில், வெற்றியைச் சுவைத்த ஒருவராவார். அவரிடமிருந்து ஏதாவதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமாயின், அது சிறப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .