2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லோர்ட்ஸில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து, 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக சர்ஃபாஸ் அஹமட் 105, இமாட் வஸீம் 63 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் லியாம் பிளங்கெட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 252 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 47.3 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜோ ரூட் 89, அணித்தலைவர் ஒயின் மோர்கன் 68 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இமாட் வஸீம் இரண்டு, மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ், ஹஸன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக ஜோ ரூட் தெரிவானார்.

இதேவேளை, கெண்டைக்கால் பின் தசைக் காயம் காரணமாக, மேற்படி தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் மொஹமட் ஹஃபீஸ் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் இர்பான் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .