Shanmugan Murugavel / 2017 ஜனவரி 03 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபொட், சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் விளையாடுவதற்காகவே, அவர் இவ்வாறு ஓய்வுபெறவுள்ளார்.
இலங்கை அணிக்கெதிராக தற்போது இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலும் பங்குபற்றிவரும் கைல் அபொட், அண்மைய சில போட்டிகளாக, தென்னாபிரிக்காவின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக மாறியிருந்தார்.
இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 29 வயதான அபொட், 21.30 என்ற சராசரியில் 39 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தவிர, 28 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 21 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் அவர் விளையாடி, சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், அண்மைக்காலம் வரை, அணியில் அவரது இடம், உறுதியாகமலேயே காணப்பட்டது. அண்மையில் டேல் ஸ்டெய்னுக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்தே, அணியில் நிரந்தரமாக விளையாடி வருகிறார். தவிர, அவுஸ்திரேலியாவில் கடந்தாண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் அரையிறுதியில், சிறந்த ஃபோர்மில் காணப்பட்டிருந்தாலும், கறுப்பின வீரரான வேர்ணன் பிலாந்தரால் அவர் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார். கறுப்பின வீரரொருவரை உள்ளடக்க வேண்டுமென்பதற்காகவே அவர் அவ்வாறு நீக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.
இந்நிலையிலேயே, இங்கிலாந்து பிராந்திய அணிகளில், கொல்பாக் முறையில் வீரர்களைச் சேர்க்கும் முறையில் விளையாடுவதற்கு, அபொட் முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்பாக் முறை என்பது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சங்க ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்குக் காணப்படும் பணியாற்றுவதற்கும் நடமாடுவதற்குமான சுதந்திரத்தைக் கொண்டுள்ளனர் என்பதாகும்.
அவ்வாறான ஒப்பந்தத்தைக் கொண்ட நாடுகளில் தென்னாபிரிக்காவும் ஒன்றாகும். எனவே, ஹம்ப்ஷையர் அணிக்காக விளையாடுவதற்காக, அபொட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும், விரைவில் ஓய்வுபெறுவார் எனவும் அறிவிக்கப்படுகிறது.
அபொட் தவிர, இளம் துடுப்பாட்ட வீரரான றீலி றொஷாவுடனும், அவ்வணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சைமன் ஹார்மர், ஹார்டுஸ் வில்ஜோன் போன்றோர், இவ்வாறான கொல்பாக் முறையில் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago