2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இங்கிலாந்து வீரர்களுக்கு ஓய்வு

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 30 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்3ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள், ஏற்கெனவே திட்டமிட்டபடி, வெளிநாட்டுச் சுற்றுலாவொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

மொஹாலியில் நேற்று நிறைவடைந்த இந்தப் போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் பெரும்பாலான வீரர்கள், டுபாய்க்குச் செல்லவுள்ளனர். தொடர்ச்சியாக நீண்ட நாட்களாகப் போட்டிகளில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கான ஓய்வை வழங்குமுகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் வீரர்கள், டிசெம்பர் 8ஆம் திகதி மும்பையில் ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக, மும்பையில் ஒன்றுகூடவுள்ளனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், "இந்த ஓய்வுக் காலம், முக்கியமான நேரத்தில் வருகிறது. தொடர்ச்சியான 3 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின்னர் இது கிடைக்கிறது. இந்த வாரம், எங்களுக்கு ஓய்வாக அமையவுள்ளது. அனேகமான வீரர்கள், டுபாய்க்குப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார். இந்த ஓய்வை வரவேற்ற குக், கிரிக்கெட்டிலிருந்து மனதை எடுத்துக் கொள்ள இது உதவுமெனவும் புத்துணர்ச்சியுடன் மீண்டும் போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பை வழங்குமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்த இங்கிலாந்து அணி, முதலாவது போட்டியில் தோல்வியடைந்த போதிலும், பின்னர் 2-1 என்ற கணக்கில் அந்தத் தொடரை வென்றிருந்தது. அதை ஞாபகப்படுத்திய குக், "ஐந்து நாட்களாக, சிறப்பான பெறுபேறை வெளிப்படுத்துவது தான் எமக்கான சவாலாகும். ஒரு போட்டியில் (முதலாவது டெஸ்ட்) அதை நாம் செய்திருந்தோம். ஆனால் அடுத்த 2 போட்டிகளிலும் நாம் அதைச் செய்திருக்கவில்லை.

"2012ஆம் ஆண்டில் நாம் விளையாடிய இந்திய அணி, வேறானாது. இப்போதைய அணியுடன் ஒப்பிடும் போது, சிறிது முதுமையான அணி. அத்தோடு 2012இல், நாம் அனுபவமிக்க வீரர்களாக இருந்தோம்" என்றும் குக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .