2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஈ.எஃப்.எல் கிண்ணம்: அரையிறுதியில் மன்செஸ்டர் யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கினதும், கால்பந்தாட்ட லீக்கினதும் 92 அணிகள் பங்கேற்கும் ஈ.எஃப்.எல் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, மன்செஸ்டர் யுனைட்டெட், சௌதாம்டன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே கோலொன்றைப் பெற்ற ஸல்டான் இப்ராஹிமோவிக், யுனைட்டெட்டுக்கு 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையை வழங்கினார். பின்னர் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற யுனைட்டெட்டின் முன்னாள வீரர் ஆஷ்லி பிளெட்சர், யுனைட்டெட் கோல் காப்பாளர் டேவிட் டி கியாவின் தவறைப் பயன்படுத்த, வெஸ்ட் ஹாமுக்கு கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க கோல் எண்ணிக்கை சமமானது.

பின்னர், போட்டியின் இரண்டாவது பாதியின் 48ஆவது நிமிடத்தில், ஹென்றிக் மிகித்திரயானிடமிருந்து பெற்ற பந்தை கோலாக்கிய அந்தோனி மார்ஷல், மீண்டும் யுனைட்டெட்டுக்கு முன்னிலையை வழங்கியதுடன், 62ஆவது நிமிடத்தில் அந்தோனியோ வலென்சியாவிடமிருந்து பெற்ற பந்தை கோலாக்கி, உறுதியான முன்னிலையை யுனைட்டெட்டுக்கு வழங்கினார். அதன்பின்னர், போட்டியின் இறுதி கணத்தில் இப்ராஹிமோவிக் மேலுமொரு கோலினைப் பெற 4-1 என்ற கோல் கணக்கில் யுனைட்டெட் வென்று அரையிறுதிக்குச் சென்றது.

வெஸ்ட்  ஹாம் யுனைட்டெட் அணிக்கெதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற போட்டியில், பொக்பாவுக்கு மஞ்சள் அட்டை காட்டப் பெற்றமைக்காக போத்தலொன்றை உதைத்த யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸ் மொரின்யோவுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், இப்போட்டியின்போது மொரின்யோ மைதானத்திலிருக்கவில்லை.

இதேவேளை, ஆர்சனல், சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சௌதாம்டன், 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஈ.எஃப்.எல் கிண்ண அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆர்சனல் அணியின் முகாமையாளராக 20 ஆண்டு காலமாக இருந்துவரும் ஆர்சீன் வெங்கர், ஈ.எஃப்.எல் கிண்ணத்தை ஒரு போதும் வென்றிருக்காத நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போர்ண்மெத்துக்கெதிரான போட்டியில் பங்கேற்ற ஆர்சனல் அணியில் 10 மாற்றங்களை மேற்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .