2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஈ.எஃப்.எல் கிண்ணம்: அரையிறுதியில் லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கினதும், கால்பந்தாட்ட லீக்கினதும் 92 அணிகள் பங்கேற்கும் ஈ.எஃப்.எல் கிண்ண அரையிறுதிப் போட்டிகளுக்கு, லிவர்பூல், ஹள் சிற்றி ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

லிவர்பூல், சம்பியன்ஷிப் அணியான லீட்ஸ் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையே லிவர்பூலின் அன்பீல்ட் மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியொன்றில். 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றே அரையிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்துள்ளது.

இம்முறை அரையிறுதிப் போட்டிகளுக்கு நுழைந்ததன் மூலம், சாதனையாக 17ஆவது தடவையாக, விலகல் முறையில் இடம்பெறும் ஈ.எஃப்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது.

முன்னைய சுற்று ஈ.எஃப்.எல் கிண்ண போட்டிகளில் களமிறக்கிய அணியைப் போன்றே இப்போட்டியிலும் இளைய வீரர்களையும் அதிக போட்டிகளில் பங்கேற்காத வீரர்களையும் லிவர்பூலின் முகாமையாளர் ஜூர்ஜன் க்ளோப் களமிறக்கியிருந்தார். இதேவேளை, லிவர்பூலின் பிலிப்பே கூட்டின்யோ, ரொபேர்ட்டோ பெர்மினோ, டேனியல் ஸ்டரிட்ஜ், அடம் லலானா ஆகியோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கூறப்பட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், தாக்குதல் திறன் குறைவாகக் காணப்பட்ட லிவர்பூல் அணி இறுதிப் 15 நிமிடங்களில் பெறப்பட்ட இரண்டு கோல்களினாலேயே வெற்றி பெற்றது. ட்ரெண்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்டிடமிருந்து பந்தைப் பெற்ற டிவோக் ஒரிஜி, நெருங்கிய தூரத்திலிருந்து போட்டியின் 76ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று தனது அணிக்கு 1-0 என்ற கோல் முன்னிலையை வழங்கினார்.

பின்னர், போட்டியின் இரண்டாவது பாதியில் களமிறங்கிய 17 வயதும் 45 நாட்கள் மட்டுமேயான பென் வூட்பேர்ண் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் லிவர்பூல் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது. இக்கோலைப் பெற்றதன் மூலம், லிவர்பூல் சார்பாக மிக இளம் வயதில் கோலைப் பெற்றவர் என்ற சாதனையை வூட்பேர்ண் படைத்தார். மைக்கல் ஓவனின் சாதனையை 98 நாட்காலால் வூட்பேர்ண் முறியடித்திருந்தார்.

ஹள் சிற்றி, நியூகாசில் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான மற்றைய காலிறுதிப்போட்டியொன்றில், பெனால்டியில் வெற்றி பெற்ற ஹள் சிற்றியும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்றது. மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதால், போட்டி பெனால்டிக்கு சென்றது. பெனால்டியில், 3-1 என்ற ரீதியில் ஹள் சிற்றி வெற்றி பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .