Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்துப் பரிந்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட லோதா செயற்குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை ஏற்படுத்துவதற்கு, அச்சபை மறுத்த நிலையில், அவ்விடயம் தொடர்பாக, இந்திய உச்சநீதிமன்றத்தில் இன்று ஆராயப்பட்டது.
இந்த அமர்வின் போது, லோதா செயற்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நிபந்தனைகளின்றி ஏற்பதாக, நாளை வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு, அச்சபையை நீதிமன்றம் கேட்டது.
மேலதிக நேரத்தை வழங்குமாறு, சபை சார்பாக ஆஜரான வழக்கறிஞரான கபில் சிபால் கேட்ட போதிலும், அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்தது.
அவ்வாறானதோர் உறுதிப்பாட்டை வழங்குவதற்கு கிரிக்கெட் சபை மறுக்குமாயின், சபையின் நிர்வாகிகளைப் பதவி நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை உச்சநீதிமன்றம் நியமிக்கும் என்ற சமிக்ஞையை, உச்சநீதிமன்ற பிரதம நீதியரசர் டி.எஸ்.தாக்கூர் வழங்கினார்.
கிரிக்கெட் சபை உழைக்கும் வருமானம், பொதுமக்களின் பணம் எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், லோதா செயற்குழுவின் பரிந்துரைகளை ஏற்காத மாநிலங்களுக்குப் பணத்தை வழங்குவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
இந்த அமர்வின் ஆரம்பத்தில் வழக்கறிஞர் சிபால், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அநுரக் தாக்கூர், கிரிக்கெட் வீரராவார்” என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த பிரதம நீதியரசர் டி.எஸ்.தாக்கூர், “நாமனைவரும் கிரிக்கெட் வீரர்கள் தான். சட்டத்தரணிகளுக்கும் நீதிபதிகளுக்குமிடையிலான போட்டியில், நீதிபதிகளின் அணியின் தலைவர் நான்” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .