2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஊக்கமருந்துப் பிரச்சினையை ஏற்கிறது ரஷ்யா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது நாட்டில், பாரியளவில் ஊக்கமருந்துப் பிரச்சினை நிலவுவதாக ஏற்றுக் கொண்டுள்ள ரஷ்யாவின் ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான முகவராண்மையின் அதிகாரிகள், அந்தக் குற்றத்தில் அரசாங்கத்துக்குச் சம்பந்தம் கிடையாது எனவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாண்டு விளையாட்டுகளில், ரஷ்யாவின் ஊக்கமருந்துப் பாவனையென்பது, முக்கிய பேசுபொருளாக இருந்தது. ரஷ்ய வீரர்களின் ஊக்கமருந்துப் பாவனை, அரச ஆதரவுடன் இடம்பெற்றதாக, ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முகவராண்மை, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு உள்ளிட்ட அமைப்புகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக், 2012 இலண்டன் கோடைகால ஒலிம்பிக், பூகோள ரீதியான ஏனைய போட்டிகள் ஆகியவற்றில், 30 விளையாட்டுகளைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள், இவ்வாறு ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக நேர்காணலொன்றை வழங்கிய ரஷ்யாவின் தேசிய ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான முகவராண்மையின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்னா அன்ட்செலியோவிச், "அது (ஊக்கமருந்துப் பாவனை) ஒரு, நிறுவனரீதியான சதியாகும்" என்று ஏற்றுக் கொண்டார்.

ஆனால், இந்த நேர்காணலின் போது அவரும் ஏனையோரும், இந்த விடயத்தில் உயர்நிலை அரசாங்க அதிகாரிகள் பங்குகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்தனர். மாறாக, வெறுமனே நிறுவனரீதியான தவறு மாத்திரமே என அவர்கள் கூறுகின்றனர்.

எனினும், பாரிய ஊக்கமருந்துப் பிரச்சினையொன்று காணப்பட்டது என்பதையும் அது நிறுவனரீதியான பிரச்சினையாகக் காணப்பட்டது என்பதையும், மூத்த அதிகாரியொருவர் ஏற்றுக் கொண்டிருப்பது, ரஷ்யாவின் நிலைப்பாட்டில் ஓரளவு தளர்வைக் காட்டுகிறது. இதற்கு முன்னர், ரஷ்யா மீதான ஊக்கமருந்துக் குற்றச்சாட்டுகள், வெறுமனே மேற்கத்தேய சதி என்பதே, அந்நாட்டின் நிலைப்பாடாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .