2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்குதல் நீக்கப்படுமா?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து பளுதூக்குதல் விளையாட்டு நீக்கப்படுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்விளையாட்டில் ஈடுபடும் பலர், ஊக்கமருந்துக் குற்றச்சாட்டில் சிக்குவதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. 1896ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்ட பளுதூக்கல் போட்டிகளில், குறித்த பிரிவினரிடையே பிரபல்யமான விளையாட்டாகக் காணப்படுகிறது.

ஆனால், 2008ஆம் ஆண்டிலும் 2012ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, நவீன தொழில்நுட்பத்தின் கீழ் மீளச் சோதிக்கும் போது, புதிதாகச் சிக்கிய 104 பேரில் 48 பேர், பளுதூக்கல் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் ஆவர். புதிதாகச் சோதிக்கப்பட்ட 1,243 மாதிரிகளும் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதால், அவை வெளியிடப்படும் போது, இவ்வெண்ணிக்கை அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதிரிகளில் சிக்கியோரில், இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்ற கஸக்ஸ்தானைச் சேர்ந்த இலியா இலின், முக்கியமானவராகக் கருதப்படுகிறது. அத்தோடு, இலண்டனில் இலியா இலின் போட்டியிட்ட 94 கிலோகிராம் எடைப் பிரிவில் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றவர்களும் தங்களது பதக்கங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையின் பணிப்பாளர் நாயகம் ஒலிவியர் நிக்லி, "பளுதூக்கல் என்பது, ஊக்கமருந்துப் பாவனை அதிகம் இடம்பெறக்கூடிய ஒரு விளையாட்டாகக் காணப்படுகிறது" என ஏற்றுக் கொண்டார். இந்த விளையாட்டுக் குறித்து, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு, தனது கவனத்தைச் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவ்விடயத்தில், ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபடுவோருக்கான செய்தியொன்றை வழங்குவதற்கு சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு எண்ணுமாயின், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து அவ்விளையாட்டைத் தடை செய்யும் வாய்ப்பு உள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .