2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கோலி, ரஹானே அதிரடி: வெள்ளையடிப்புக்குத் தயாராகிறது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான, இன்றைய நாள் முடிவில், இந்திய அணி, முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

3 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 557 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இதில், அணித்தலைவர் விராத் கோலி, உப தலைவர் அஜின்கியா ரஹானேயும், 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களுடன் தடுமாறிய போது இணை சேர்ந்து, 4ஆவது விக்கெட்டுக்காக 365 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். இந்த இணைப்பாட்டம், இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட 5ஆவது உயரிய இணைப்பாட்டமாகும்.

துடுப்பாட்டத்தில் தனது 2ஆவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த விராத் கோலி, 211 ஓட்டங்களைப் பெற்றார். அவரது இரண்டு இரட்டைச் சதங்களுமே, இவ்வாண்டில் பெறப்பட்டதோடு, இரண்டுமே, அணித்தலைவராகப் பெறப்பட்டவையாகும். இதன்மூலம், இந்திய அணித்தலைவரொருவர், இரண்டு இரட்டைச் சதங்களைப் பெற்ற முதலாவது சந்தர்ப்பம் என்ற சாதனையைப் படைத்தார். ரஹானே, 188 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து, இரட்டைச் சதத்தைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டார். ஏனையோரில் றோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 51, செற்றேஸ்வரர் புஜாரா 41 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், ஜீதன் பட்டேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணி, இன்றைய நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில், டொம் லேதம் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 17, 6 ஓட்டங்களைப் பெற்றனர்.

இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று, இத்தொடரை வெள்ளையடிப்புச் செய்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .