2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சிற்றியை தோற்கடித்தது டொட்டென்ஹாம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற போட்டிகளில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஆர்சனல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் லெய்செஸ்டர் சிற்றி, சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், தற்போது முதலிடத்தில் உள்ள மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இப்பருவகாலத்தில், இதுவரை தோல்வியடையாத சாதனையை நீடித்துக் கொண்டுள்ளது.

டொட்டேன்ஹாமின் இடதுபின்கள வீரரான டனி றோஸின் அடியொன்றை, சிற்றியின் அலெக்ஸாந்தர் கொலறோவ், தனது அணியின் கோல்கம்ப எல்லைக்குள் செலுத்த டொட்டென்ஹாம் முன்னிலை பெற்றதுடன், டெலே அல்லி பெற்ற கோலின் மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது.

ஆர்சனல், பேர்ண்லி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், கையால் கையாளப்பட்ட பந்து, “ஓப் சைட்” என சந்தேகிக்கப்படும், சர்ச்சைக்குரிய இறுதி நேரக் கோலால், ஆர்சனல், 1-0  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் மேலதிக நிமிடங்களில், அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லினை நோக்கி தியோ வொல்கோட் தலையால் முட்டிய பந்தை அவர் அடித்தபோது, பந்தானது, லோரண்ட் கொஷென்கியின் முழங்கையில் பட்டே கோல்கம்பத்துக்குள் சென்றது போல் இருந்தது. தவிர, கொஷென்கி, கோல் பெறப்பட்ட கோட்டிலேயே நின்றிருந்தார்.

மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில், மாற்று வீரராகக் களமிறங்கிய யுனைட்டெட்டின் அந்தோணி மார்ஷியல், கோலொன்றைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்கியபோதும், பின்னர், யுனைட்டெட்டின் கோல்காப்பாளர் டேவிட் டி கியா விட்ட தவறொன்றைப் பயன்படுத்தி, ஜோ அலென் பெற்ற கோலினால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

தற்போதைய சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி, சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .