2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 19 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் உப தலைவர் டினேஷ் சந்திமாலின் பெருவிரலில் ஏற்பட்ட உபாதைகாரணமாக, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில வாரங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்குகொள்ள முடியாது என அறிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்றுவரும் உள்ளூர் தொடரான வர்த்தக கிரிக்கெட் தொடரில் விளையாடிவந்த சந்திமால், அப்போட்டியொன்றில் வைத்தே உபாதைக்குள்ளாகியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே அவருக்கு இந்த உபாதை ஏற்பட்டுள்ளது. டிமோ அணிக்கும் டெக்டேர்ட் ஜேர்சி அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், டிமோ அணிக்காக விளையாடிய சந்திமால், களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, வலதுகைப் பெருவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. அவரது பெருவிரலில், மூட்டு விலகல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இன்று திங்கட்கிழமை, அவர் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போகும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், ஒக்டோபரிலும் நவம்பரிலும் இடம்பெறவுள்ள சிம்பாப்வேக்கான தொடரில் அவர் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் முக்கிய வீரராக மாறியுள்ள சந்திமால், இவ்வாண்டு இலங்கைக்காக விளையாடிய 36 போட்டிகளில் பங்குபற்றி 4 சதங்கள், 9 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1,451 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .