2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சம்பியன் வாய்ப்பைத் தக்கவைத்தார் ஹமில்டன்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளார்,

பந்தயத்தின் ஆரம்பத்தில், ஹமில்டனின் காரின் முன் சக்கரம் இறுகியதால், முதலாவது வளைவில் வெளியே சென்று, அதிர்ச்சியொன்றை எதிர்நோக்கியிருந்தாலும், அதன்பின்னர், எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்நோக்காது, தனது வாழ்நாளில், 51ஆவது வெற்றியைப் பெற்றார்.

பிரேஸில், அபு தாபியில் இடம்பெறவுள்ள பந்தங்களில் மொத்தமாக 50 புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நிலையில், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்கை விட 19 சம்பியன்ஷிப் புள்ளிகள் ஹமில்டன் பின்தங்கியுள்ளார். மீதமாயிருக்கின்ற இரண்டு பந்தயங்களிலும், ஹமில்டனுக்குப் பின்னால் இரண்டாமிடங்களைப் பெற்றாலே, இவ்வருடத்துக்கான போர்மியுலா வண் பட்டத்தை றொஸ்பேர்க் கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஹமில்டன், “ மெக்ஸிக்கோவில் இது என முதலாவது வெற்றி, அதனால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். தவிர, “நிக்கோ சிறப்பாகச் செயற்படுகிறார். நான் தொடர்ந்து வெற்றி பெறுதையே இலக்காகக் கொண்டுள்ளேன். அது மட்டுமே நான் செய்ய முடியும்” என மேலும் ஹமில்டன் தெரிவித்தார்.

இப்பந்தயத்தின் முதலாவது வளைவில், றொஸ்பேர்க்கும் றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பட்டனும் மோதியபோதும், குறித்த சம்பவம் விசாரிக்கப்பட்டு, எதுவித தண்டமும் வழங்கப்படவில்லை. வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தைப் பிடிக்க முற்பட்ட நிலையிலேயே மோதல் இடம்பெற்றிருந்தது.

மெர்சிடிஸ் அணியுடன் போட்டியிடுவதற்காக, மிகவும் மெதுவான டயர்களுடன் பந்தயத்தை ஆரம்பித்த றெட் புல் அணியின் உத்தி வெற்றியளித்திருக்கவில்லை. இறுதி நேரத்தில் சிக்கலை அளித்திருந்தது. இறுதிச் சுற்றுக்களில், றொஸ்பேர்க்குக்கு சவால் விடுக்க வேண்டியிருந்த வெர்ஸ்ட்டப்பன், பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியான் வெட்டல், சக றெட் புல் அணியின் ஓட்டுநரான அவுஸ்திரேலியாவின் டேனியல் றிச்சியார்டோவிடமிருந்து சவாலை எதிர்கொண்டிருந்தார்.

இறுதியில், வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றபோதும், முதலாவது வளைவில் தவறை மேற்கொண்டமைக்காக ஐந்து செக்கன் தண்டம் வழங்கப்பட்டு ஐந்தாமிடத்துக்கு கீழிறக்கப்பட்டார். இந்நிலையில், மூன்றாமிடத்தை வெட்டல் பெற்றார். எனினும் புதிய அபாயகரமான வாகனச் செலுத்துகையின் கீழ் வெட்டல் தண்டிக்கப்பட, றிச்சியார்டோ மூன்றாமிடத்தைப் பெற்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .