Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரில், இலங்கை நேரப்படி, இன்று புதன்கிழமை (19), இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளில், றியல் மட்ரிட், லெய்செஸ்டர் சிற்றி, ஜுவென்டஸ், செவில்லா, பொரிஸியா டொர்ட்டமுண்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், பெயார் லெவர்குஸன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட், போலந்து கால்பந்தாட்டக் கழகமான லெய்கா வோர்ஷோ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 5-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கரித் பேல், மார்க்கோ அஸென்ஸியோ, லூகாஸ் வஸ்கூஸ், அல்வரோ மொராட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். “ஒவ்ண் கோல்” முறையில் ஒரு கோல், றியல் மட்ரிட்டுக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் தற்போதைய சம்பியன்களான லெய்செஸ்டர், டென்மார்க் கால்பந்தாட்டக் கழகமான எஃப்.சி கொப்பேன்ஹன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில, 1-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் வெற்றி பெற்றது. லெய்செஸ்டர் சார்பாக பெறப்பட்ட கோலினை, இஸ்லாம் ஸ்லிமானியிடமிருந்து பந்தைப் பெற்ற றியாட் மஹ்ரேஸ் பெற்றிருந்தார்.
அந்தவகையில், இத்தொடரின் முதல் மூன்று குழுநிலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள லெய்செஸ்டர், இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப் 16 அணிகளுக்கிடையிலான, விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம், ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகமான பெயார் லெவர்குஸன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் அணியின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் மேற்கொண்ட அபாரமான மூன்று தடுப்புகளின்மூலமே, டொட்டென்ஹாம் அணியால், சமநிலையில் போட்டியை முடித்துக் கொள்ள முடிந்தது.
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ், பிரான்ஸ் கால்பந்தாட்டக் கழகமான லயோன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில், ஜுவென்டஸ் வெற்றி பெற்றது. ஜுவென்டஸ் சார்பாக, மாற்று வீரராகக் களமிறங்கிய ஜுவான் குவார்டோ கோலினைப் பெற்றிருந்தார். ஜுவென்டஸ் அணியின் கோல் காப்பாளரான ஜிஞ்சலி புபான், பெனால்டியொன்றினைத் தடுத்திருந்ததுடன், மேலும் சில அபாரமான தடுப்புக்களை மேற்கொண்டு, தனது அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.
ஸ்பெய்ன் கால்பந்தாட்டக் கழகமான செவில்லா, குரோஷிய கால்பந்தாட்டக் கழகமான டைனமோ ஸக்ரெப் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செவில்லா சார்பாக பெறப்பட்ட கோலை, சமீர் நஸ்ரி பெற்றிருந்தார்.
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகமான பொரிஸியா டொர்ட்டமுண்ட், போர்த்துக் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில், பொரிஸியா டொர்ட்டமுண்ட் வெற்றி பெற்றது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago