2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் லீக்கில் சம்பியனானது றியல் மட்ரிட்

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கில், ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட் சம்பியனாகியது. ஐக்கிய இராச்சியத்தின் கார்டிப்பில், இலங்கை நேரப்படி, நேற்று (04) அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இத்தாலியக் கழகமான ஜுவென்டஸைத் தோற்கடித்தே, றியல் மட்ரிட் சம்பியனாகியது.  

போட்டியைப் பிரகாசமாக ஆரம்பித்த ஜுவென்டஸைத் தடுத்து நிறுத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ, டனி கர்வகாலிடமிருந்து பெற்ற பந்தை, போட்டியின் 20ஆவது நிமிடத்தில் கோலாக்கி, றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கினார்.  

இதனையடுத்த ஏழாவது நிமிடத்தில், தலைக்கு மேலால், அபாரமானதொரு கோலைப் பெற்ற மரியோ மண்டுக்கிச், கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். இக்கோலோடு, போட்டியின் முதற்பாதி, 1-1 என்று சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவை போன்று தோன்றின. 

எவ்வாறெனினும், போட்டியின் இரண்டாவது பாதியில், நிறுத்த முடியாத அணியாக, றியல் மட்ரிட் காணப்பட்டது. போட்டியின் 61ஆவது நிமிடத்தில், கஸேமீரோவின் உதை, சமி கெதீராவின் குதியில் பட்டுக் கோலானது மூலம், றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. பின்னர், அடுத்த மூன்றாவது நிமிடத்தில், லூகா மோட்ரிக்கிடமிருந்து பெற்ற பந்தை, கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கியதன் மூலம், றியல் மட்ரிட், வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது.  

இதனைத் தொடர்ந்து, றியல் மட்ரிட்டின் அணித்தலைவர்  சேர்ஜியோ றாமோஸுடனான மோதலைத் தொடர்ந்து, இரண்டாவது தடவையாக மஞ்சள் அட்டை காட்டப்பெற்ற ஜுவென்டஸின் மாற்றுவீரராகக் களமிறங்கிய ஜுவான் குவராடோ, சிவப்பு அட்டை காட்டப்பெற்று, மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.  

இறுதியாக, போட்டியின் 90ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய மார்கோ அஸென்ஸியோ பெற்ற கோலோடு, 4-1 என்ற கோல் கணக்கில், றியல் மட்ரிட் வெற்றிபெற்றது.  

அந்தவகையில், ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரொன்றில், சாதனை ரீதியாக, 12ஆவது தடவையாக சம்பியனான றியல் மட்ரிட், முதற்தடவையாக, சம்பியன்ஸ் லீக் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட அணி என்று, தமது பெயரை வரலாற்றில் பொறித்துக் கொண்டது. கடந்த நான்கு பருவகால சம்பியன்ஸ் லீக்கில், மூன்று முறை, றியல் மட்ரிட் சம்பியனாகியுள்ளது.  

இந்நிலையில், எதிர்பார்த்தது போலவே, கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோல்களால்,  றியல் மட்ரிட் சம்பியனாகிய நிலையில், தற்போது, மூன்று வெவ்வேறான சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிகளில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல்களைப் பெற்றுள்ளார். றியல் மட்ரிட்டுடன், மூன்று சம்பியன்ஸ் லீக்குகளை வென்ற ரொனால்டோ, மன்செஸ்டர் யுனைடெட்டுடனும், ஒரு சம்பியன்ஸ் லீக்கை வென்றிருந்தார்.  

இறுதிப் போட்டி வரைக்கும், இப்பருவகால சம்பியன்ஸ் லீக்கில், மூன்று கோல்களை மட்டும் எதிரணிகளைப் பெற அனுமதித்த ஜுவென்டஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோவினதும் றியல் மட்ரிட்டினதும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இறுதிப் போட்டியில், நான்கு கோல்களை வழங்கியிருந்தது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .