Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில், நேற்று இடம்பெற்ற இவ்வாண்டுக்கான சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பீபா) கால்பந்தாட்ட விருதுகள் வழங்கும் விழாவில், உலகின் சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரிடப்பட்டுள்ளார்.
ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினதும் ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி, பிரெஞ்சுக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனினதும் பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான நேமர் ஆகியோரைத் தாண்டியே சிறந்த வீரர் விருதை இன்னொரு ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட்டினதும் போர்த்துக்கல் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.
தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்கள், தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், இணையத்தளத்தில் ரசிகர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தலா 25 சதவீதம் செல்வாக்கு செலுத்தக் கூடியவாறு அளிக்கப்பட்ட வாக்குகளில், கிறிஸ்டியானோ ரொனல்டோ 43.16 சதவீதமான வாக்குகளையும் லியனல் மெஸ்ஸி 19.25 சதவீதமான வாக்குகளையும் நேமர் 6.97 சதவீதமான வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
2016-17 பருவகாலத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கிலும் ஸ்பானிய லா லிகாவிலும் றியல் மட்ரிட் சம்பியனாவதற்கு 32 வயதான ரொனால்டோ துணை புரிந்திருந்தார்.
கடந்தாண்டுக்கு முன்னர், பிரெஞ்சு கால்பந்தாட்ட சஞ்சிகையான பலோன் டி ஓரால் வழங்கப்படும் விருதே சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் விருதாக இருந்த நிலையில், கடந்தாண்டே தனித்து தமது விருதை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ஆரம்பித்திருந்தது. அந்தவகையில், கடந்தாண்டு தான் வென்ற விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ தக்கவைத்துள்ளார்.
பார்சிலோனாவினதும் நெதர்லாந்து தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீராங்கனையான லிகே மார்ட்டின்ஸ் சிறந்த வீராங்கனையாக தெரிவானார்.

றியல் மட்ரிட்டின் முகாமையாளரான ஸினேடி ஸிடன் சிறந்த ஆண் முகாமையாளராகத் தெரிவாகியதோடு, நெதர்லாந்து பெண்கள் தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளரான சரினா வைக்மன் சிறந்த பெண் பயிற்சியாளராகத் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, கிறிஸ்டல் பலஸுக்கெதிராக ஆர்சனலின் முன்கள வீரர் ஒலிவர் ஜிரோட் பெற்ற கோல், இவ்வாண்டின் சிறந்த கோலாகத் தெரிவாகியது.

இந்நிலையில், உலக பதினொருவர் அணியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி, நேமர், றியல் மட்ரிட் வீரர்களான லூகா மோட்ரிக், டொனி க்ரூஸ், மார்ஷெலோ, சேர்ஜியோ றாமோஸ், பார்சிலோனாவின் இனியஸ்டா, பரிஸ் ஸா ஜெர்மைனின் டனி அல்விஸ், ஏ.சி மிலனின் லியனார்டோ பொனுச்சி, ஜுவென்டஸின் ஜல்லூயிஜி புபான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பதினொருவரில், அதிகபட்சமாக, ஐந்து றியல் மட்ரிட் வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களிலிருந்து எவரும் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியினது கோல் காப்பாளரான, 39 வயதான ஜல்லூயிஜி புபான் சிறந்த கோல் காப்பாளராகத் தெரிவாகியிருந்தார்.
இதேவேளை, செக் லீக் போட்டிகளின்போது, இவ்வாண்டு பெப்ரவரியில், பொஹெமியன்ஸ் 1905 அணியின் கோல் காப்பாளர் மார்ட்டின் பெர்கோவெக்குக்கு உயிர் காப்பு முதலுதவியை அளித்த டோகோவின் வீரர் பிரான்ஸிஸ் கொனேக்கு சிறந்த நன்னடத்தைக்கான விருது வழங்கப்பட்டிருந்தது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago