பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த 23 வயதான சகலதுறை வீரர் ஸஃபார் அன்சாரி காயத்துக்குள்ளாகியிருப்பதால் அணியில் அவரது இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
தற்போது சரே அணிக்காக விளையாடிவரும் அன்சாரி, ஓல்ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறும் லங்காஷையர் அணிக்கெதிரான போட்டியில் கவர் பொய்ன்ட் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தாா். அவ்வேளையில் எதிரணி வீரர் அஷ்வெல் பிரின்ஸ் அடித்த பந்தைப் பிடியெடுக்க முயன்றபோதே அவர் காயமடைந்துள்ளார்.
அன்சாரியின் இடது பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயமானது பாரதூரமானதா என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆயினும், அவரால் உடனடியாக மைதானத்துக்கு திரும்பமுடியாது என்றும், இரு தினங்களுக்குப் பின்பே காயம் குறித்து தீர்மானமாகக் கூறமுடியுமென்றும் சரே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"இங்கிலாந்து அணியில் பெயர் அறிவிக்கப்பட்ட அன்றே அவர் காயத்துக்குக்குமுள்ளாகியிருப்பது கவலையளிக்கிறது. இங்கிலாந்து அணி தேடும் ஆற்றலுள்ள ஒரு வீரராக அவர் இருக்கிறார். அணியில் விளையாடும் வாய்ப்பு அன்சாரிக்கு கிடைக்கும் பட்சத்தில் அது இங்கிலாந்துக்கு நிச்சயம் பயனுள்ளதாயிருக்கும்'' என்கிறார் சரே அணியின் கிரிக்கெட் நிர்வாகியான அலெக்ஸ்டுவர்ட்.
தற்போது விளையாடிக்கொண்டிருந்த போட்டியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியிருந்த அன்சாரி 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 55 முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 3 சதங்கள் 12 அரைச்சதங்களோடு 2370 ஓட்டங்களைப் பெற்றிருப்பதோடு 100 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார். கடந்த மே மாதத்தில் அயர்லாந்து அணிக்கெதிராக ஒரு நாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்டிருந்தாலும் அந்தப் போட்டி சீரற்ற காலநிலையால் கைவிடப்பட அன்சாரிக்கு துடுப்பெடுத்தாடவோ, பந்துவீசவோ வாய்ப்புக் கிடைத்திருக்கவில்லை.
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்தத் தொடருக்காக இங்கிலாந்து அணி வரும் 30 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேஸ்சுக்கு பயணமாகவுள்ளது. அதற்கிடையில் அன்சாரியின் காயம் குணமாகிவிடும் வாய்ப்பு உண்டா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.