2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொடரைச் சமப்படுத்தியது பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வரலாற்று வெற்றியைப் பெற, தொடர், 1-1 என்று சமநிலையானது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தமது முதலாவது இனிங்ஸில், தமிம் இக்பாலின் 104, மொமினுள் ஹக்கின் 66 ஓட்டங்களின் துணையோடு, 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொயின் அலி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் 54, கிறிஸ் வோக்ஸின் 46, அடில் ரஷீட்டின் ஆட்டமிழக்காத 44 ஓட்டங்களின் துணையோடு 244 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மெஹெடி ஹஸன் மிராஸ் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்,

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இம்ரல் கைஸ் 78, மஹ்முதுல்லா 47, ஷகிப் அல் ஹஸன் 41, தமிம் இக்பால் 40, ஷுவகட்டா ஹொம் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் ரஷீட் நான்கு விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் விக்கெட் எதனையும் இழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 59, பென் டக்கெற் 56 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மெஹெடி ஹஸன் மிராஸ் ஆறு விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹஸன் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் 12 விக்கெட்டுகளையும் இத்தொடரில் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மெஹெடி ஹஸன் மிராஸ், போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .