2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நான்காவது போட்டியையும் வென்றது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா, தொடரில் 4-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அவுஸ்திரேலிய அணியில், டேனியல் வொரலுக்குப் பதிலாக ஸ்கொட் போலண்ட் இடம்பெற்றதோடு, தென்னாபிரிக்கா அணியில், டேவிட் மில்லர், டேல் ஸ்டெய்ன், கஜிஸ்கோ ரபடா, இம்ரான் தாஹீருக்குப் பதிலாக பர்கான் பெஹாத்திரின், கைல் அபொட், ஆரொன் பன்கிஸோ, தப்ரயாஸ் ஷம்ஷி ஆகியோர் இடம்பெற்றனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில், 49 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் மிற்செல் மார்ஷ், மத்தியூ வேட் ஆகியோர் பெற்ற அரைச்சதங்கள் காரணமாக, இறுதியில், 36.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மிற்செல் மார்ஷ் 50, மத்தியூ வேட் 52 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கைல் அபொட் நான்கு, தப்ரயாஸ் ஷம்ஷி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 35.3 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் பப் டு பிளெசிஸ் 69 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கிறிஸ் ட்றிமெய்ன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக கைல் அபொட் தெரிவானார்.

இப்போட்டியின் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும்போது, மத்தியூ வேட்டும் தப்ரயாஸும் வாய்த்தர்க்கங்களில் ஈடுபட்டதோடு, ஓட்டமொன்றைப் பெறும்போது, ஷம்ஷியினை, வேட் முழங்கையால் இடித்திருந்ததுடன், அதன்பின்னர், டு பிளெசிஸ் நடுவர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, நடுவர்கள் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .