2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்திடம் பங்களாதேஷ் மீண்டும் தோல்வியுற்றது

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்டஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நெல்சனில் இன்று இடம்பெற்ற போட்டியிலும் தோல்வியுற்ற பங்களாதேஷ் அணி தொடரை இழந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் மஷ்ரபி மோர்ட்டசா, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். பங்களாதேஷ் அணியில், காயமடைந்த முஷ்பிகூர் ரஹீமுக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற நூருல் ஹஸன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். ஓய்வு வழங்கப்பட்ட முஸ்தபிஸுர் ரஹ்மானுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற சுபாஷிஸ் றோய், அணியிலிருந்து நீக்கப்பட்ட சௌமியா சர்க்காருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற தன்பீர் ஹைதர் ஆகியோர் பங்களாதேஷ் அணி சார்பான தமது அறிமுகங்களை மேற்கொண்டிருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. நியூசிலாந்து அணியின் இனிங்ஸில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், எட்டு ஆண்டுகளின் பின்பு அணிக்குத் திரும்பிய நீல் ப்றூம் தனித்து நின்று போராடி, தனது முதலாவது சதத்தைப் பெற்று, நியூசிலாந்து அணிக்கு கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை வழங்கினார்.

நீல் ப்றூம் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், லுக் றொங்கி 35 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஷம் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், மஷ்ரபி மோர்ட்டசா மூன்று விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமட், ஷகிப் அல் ஹஸன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சுபாஷிஸ் றோய், மொஷாடிக் ஹொஸைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

252 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில், ஒரு விக்கெட்டினை இழந்து 105 ஓட்டங்களுடன் காணப்பட்ட பங்களாதேஷ் அணி, மிகுதி ஒன்பது விக்கெட்டுகளையும் 79 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில், இம்ருல் கைஸ் 59, சபீர் ரஹ்மான் 38, நூருல் ஹொஸைன் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மூன்று விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டினையும், மிற்சல் சான்ட்னெர், லொக்கி பெர்கியூசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, நீல் ப்றூம் தெரிவானார்.

இதேவேளை, நாளை மறுதினம் (31) இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டிக்கான நியூசிலாந்துக் குழாமில், சுழற்பந்துவீச்சாளர்  ஜீதன் பட்டேல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .