2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது 1ஆவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரென்பது, எப்போதுமே அதிக கவனத்தை ஈர்ப்பது குறைவானது. இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, மலையும் மடுவும் போன்றன என்று சொல்லப்படக்கூடியன. ஆனால், இன்று ஆரம்பிக்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட தொடர், வழக்கத்தை விட அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த அதிக கவனத்துக்குக் காரணமாக பிரதான காரணி, பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகள் தான். அண்மைக்காலமாக, வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்படுவதன் காரணமாக, இந்தத் தொடர் இடம்பெற வேண்டுமா என்பது தொடர்பில், பாரிய இழுபறி காணப்பட்டது. இறுதியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கின்றன எனத் தெரிவித்து, இந்தத் தொடர் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.

எனினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ், தனிப்பட்ட பாதுகாப்புக் காரணங்களுக்காக, இத்தொடரிலிருந்து விலகிக் கொண்டார். இடம்பெற்றுமுடிந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மிகப்பாரியளவு பாதுகாப்புடன், பிரச்சினைகளின்றி இடம்பெற்று முடிந்திருக்கிறது.

மறுபக்கத்தில், இதுவரையில் 133 டெஸ்ட் போட்டிகளின் விளையாடியுள்ள இங்கிலாந்து அணித் தலைவர் அலெஸ்டர் குக், நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டியில் விளையாடுவதன் மூலம், இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை முறியடிக்கவுள்ளார்.

உலகுக்குக் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய நாட்டின் சார்பில், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதென்பது, மிக முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. அத்தோடு, சில நாட்களுக்கு முன்னரே, அவரது இரண்டாவது குழந்தையும் பிறந்ததென்பது, அவரது இச்சாதனையை மேலும் சுவாரசியத்துக்குள்ளாக்குகிறது.

இந்த இரண்டு காரணங்களுக்கு நடுவிலேயே, சிட்டகொங்கில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 9:30 மணிக்கு, இப்போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டியில், இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அலெஸ்டயர் குக்குடன் இணைந்து, புதுமுக வீரராக ஹசீப் ஹமீட் அல்லது பென் டக்கெற் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வாய்ப்புகள், ஹசீப் ஹமீட்டுக்கே காணப்படுகின்றன.

ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் மாற்றங்கள் இருக்காது எனக் கருதப்படும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து அதிக கவனம் ஏற்பட்டுள்ளது. மொயின் அலி, அடில் றஷீட் ஆகியோரோடு, அனுபவமிக்க வீரரான கரெத் பற்றியும் காணப்படுகிறார். இவர், இறுதியாக 2005ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தார். ஆனால், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவ்வணி களமிறங்குமா என்பது சந்தேகத்துக்குரியதே.

பங்களாதேஷ் அணியைப் பொறுத்தவரை, அவர்களது சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனே, முக்கியமான வீரராகக் காணப்படுகிறார். அவரோடு, மகமதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டால், இங்கிலாந்துக்கு ஓரளவு போட்டித்தன்மையை வழங்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .