2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பெடரரை வெல்ல ஜோக்கோவிச் பயன்படுத்திய யுத்தி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல் வீரரான நொவக் ஜோக்கோவிச்சுக்கும் இரண்டாம் நிலை வீரரான ரொஜர் பெடரருக்குமிடையிலான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு. தான் பயன்படுத்திய யுத்தியொன்றை ஜோக்கோவிச் வெளியிட்டுள்ளார்.

இப்போட்டியில் பார்வையாளர்களாகக் காணப்பட்டிருந்தவர்களில் பெரும்பான்மையானோர் ரொஜர் பெடரரின் இரசிகர்களாக இருந்ததோடு, நொவக் ஜோக்வோவிச்சுக்குக் கடுமையான அழுத்தங்களை வழங்கியிருந்தனர்.

எந்நேரமும் 'ரொஜர் ரொஜர்" எனச் சத்தமிட்ட அவர்கள், ஜோக்கோவிச் தவறுசெய்யும் ஒவ்வொரு தடவையும் அதை வரவேற்றதோடு, ஜோக்கோவிச் சேர்வ் செய்ய முயலும் போது, அதைக் குழப்புவதற்காகச் சத்தமிட்டனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஜோக்கோவிச், 'நான் என்ன செய்ய முயன்றேனென்றால், என்னுடன் நான் மனரீதியான விளையாட்டில் ஈடுபட்டேன். அவர்கள் 'ரொஜர்" எனச் சத்தமிடுவார்கள், நான் அதை அவர்கள் 'நொவக்" எனச் சத்தமிடுகிறார்கள் என எண்ணிக் கொள்வேன்" எனத் தெரிவித்தார்.

மைதானத்துக்குள் வரும்போதே, ரொஜர் பெடரரிடமிருந்து எதை எதிர்பார்க்க வேண்டுமென்பதை அறிந்திருந்ததாகத் தெரிவித்த ஜோக்கோவிச், அதன் காரணமாக மனரீதியாகத் தயாராக இருந்ததாகத் தெரிவித்தார். ஆகவே, ரொஜர் பெடரரின் சிறப்பான விளையாட்டைப் பார்த்து ஆச்சரியமடையவில்லை எனக் குறிப்பிட்டார்.

பார்வையாளர்களின் சத்தத்தை ஜோக்கோவிச் கையாண்ட விதம் குறித்துப் பாராட்டுத் தெரிவித்த பெடரரின் இணைப் பயிற்றுவிப்பாளர் செவெரின் லுதி, உணர்வுகள் ரீதியாக அந்தச் சத்தத்தையும் எதிர்ப்பையும் எதிர்கொள்வது இலகுவானதல்ல எனக் குறிப்பிட்டார்.

இதுவரை 10 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ள  28 வயதான ஜோக்கோவிச், ரொஜர் பெடரரின் 17 கிரான்ட் ஸ்லாம் பட்டங்கள் குறித்தும் தனது கவனத்தை வெளிப்படுத்தினார்.

'அதைப் பற்றி நான் சிந்திக்கவில்லையெனத் தெரிவித்தால், நான் உண்மையாகக் கருத்துத் தெரிவிக்கவில்லையென அர்த்தம். நான் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன்" எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ளதைப் போன்று தனது உடலைக் கவனமாகக் கவனெடுத்தால், நீண்ட காலம் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைக்குமெனவும், அவ்வாறிருந்தால், மேலும் சில கிரான்ட் ஸ்லாம் பட்டங்களுக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்குமெனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .