2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

போராடுகிறது பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாளில், இரு அணிகளும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஐந்தாள் நாளான நாளை, எந்த அணிக்கு வெற்றி கிடைக்குமென்பது உறுதிபடத் தெரியாத நிலையில் ஆரம்பிக்கவுள்ளது.

286 ஓட்டங்களை வெற்றியலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிக்கு 33 ஓட்டங்களே தேவையென்ற நிலையில் காணப்படுகிறது. ஆனால், 2 விக்கெட்டுகளே கைவசமுள்ள நிலையில், கவனமாகவும் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலையில் காணப்படுகிறது.

முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட நிலையில், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், 6ஆவது விக்கெட்டுக்காக 87 ஓட்டங்கள் பகிரப்பட, அவ்வணி உறுதியான நிலையை அடைந்தது. எனினும், 6ஆம், 7ஆம், 8ஆம் விக்கெட்டுகள், குறுகிய இடைவெளியில் வீழ்த்தப்பட்டு, 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்கள் என்ற தடுமாற்றமான நிலையை, பங்களாதேஷ் அடைந்தது. 9ஆவது விக்கெட்டுக்காக, இதுவரையிலும் 15 ஓட்டங்கள் பகிரப்பட்டுள்ளன.

துடுப்பாட்டத்தில் சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 59, இம்ருல் கைய்ஸ் 43, முஷ்பிக்கூர் ரஹீம் 39, மொமினுல் ஹக் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கரித் பற்றி 3, மொய்ன் அலி 2, ஸ்டுவேர்ட் ப்ரோட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக, 8 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று, 286 ஓட்டங்களை, பங்களாதேஷுக்கு வெற்றியிலக்காக வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .