2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பிரதம தேர்வாளராக ட்ரெவர் ஹோர்ன்ஸ்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 17 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரதம தேர்வாளர் றொட் மார்ஷ், தனது பதவியிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை (16) விலகியதைத் தொடர்ந்து, தேர்வுக் குழுவில் ஏற்பட்ட வெற்றியிடத்துக்கு கிரேய்க் சப்பல் நியமிக்கப்பட்டுள்ளதோடு, பிரதம தேர்வாளர் பதவிக்கு ட்ரெவர் ஹோர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கடந்த புதன்கிழமையிரவு இடம்பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் சிறப்புக் கூட்டத்தையடுத்து வழங்கப்பட்ட, மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு நியமனங்களும் இடைக்கால அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய பதவிக்காலத்தில், 2014ஆம் ஆண்டு முதல் தேர்வளராக இருந்து வரும் ஹோர்ன்ஸ், பிரதம தேர்வாளராக 10 வருடங்கள் இருந்தமை உள்ளடங்கலாக, 1993ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரையும் தேர்வாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். தற்போது வரையிலும், குயின்ஸ்லாந்து மாநில திறமை வெளிப்பாடு முகாமையாளராக இருந்து கொண்டு தேர்வாளர் குழாமிலிருந்த ஹோர்ன்ஸ், அணித் தேர்வு கடமைகளில் முழுமையாக கவனஞ் செலுத்தும் பொருட்டு, அப்பதவியை துறக்கவுள்ளார்.

இதேவேளை, வீரராக ஓய்வு பெற்ற பின்னர், 1984ஆம் ஆண்டிலிருந்து 1988ஆம் ஆண்டு வரையிலும் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையிலும் தேர்வாளராகப் பணியாற்றிய சப்பல், அதன் பின்னர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தேசிய திறமை வெளிப்பாட்டு முகாமையாளராகயிருந்தார். இந்நிலையில், இடைக்காலத் தேர்வாளராக கடமையாற்றப் போகும் சப்பல், தனது அப்பதவியிலிருந்து விலகுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .