2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

பதிலடி கொடுத்தது இலங்கை

Editorial   / 2017 ஜூலை 03 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில், புதுமுக வீரரான வனிது ஹஸரங்கவின் சாதனை, உபுல் தரங்கவின் நிதானமான துடுப்பாட்டம், லக்‌ஷான் சந்தகானின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன், இலங்கை அணி வெற்றிபெற்றது. 

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இதற்கு முன்னைய போட்டியில், சிம்பாப்வே அணி பெற்ற வெற்றிக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துடன், இலங்கை களமிறங்கியது. 

முதலில் சிம்பாப்வே அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்த இலங்கை, ஒரு கட்டத்தில் சிம்பாப்வே, ஒரு விக்கெட்டை இழந்து 67 ஓட்டங்களுடன் காணப்படும் நிலையில், சிறிதளவு அழுத்தத்தை எதிர்கொண்டது. 

ஆனால், மத்திய ஓவர்களில், சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்திய இலங்கை, சிம்பாப்வே அணியை, 155 ஓட்டங்களுக்குச் சுருட்டியது. 

இதில், தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய வனிது, சிம்பாப்வே அணியின் இறுதி 3 விக்கெட்டுகளையும், ஹட்-ட்ரிக் முறையில் வீழ்த்தினார். 

தனது அறிமுகப் போட்டியிலேயே ஹட்-ட்ரிக் சாதனை படைத்த வனிது, இவ்வாறு அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஹட்-ட்ரிக் சாதனை படைத்தவராக, பங்களாதேஷின் தைஜுல் இஸ்லாம், தென்னாபிரிக்காவின் கஜிஸ்கோ றபடா ஆகியோருடன் இணைந்து கொண்டார். 19 வயதான வனிது ஹஸரங்க, புறச்சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு, காலி றிச்மன்ட் கல்லூரியைச் சேர்ந்த வீரராவார். 

156 என்ற இலகுவான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், அனுபவ வீரரான உபுல் தரங்க பெற்ற அரைச்சதத்தின் உதவியுடன், வெற்றியைப் பெற்றது. இதில், தரங்க பெற்ற அரைச்சதம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், தொடர்ச்சியான 3ஆவது போட்டியில் அவர் பெறும் அரைச்சதமாகும். 

இலங்கையின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, தொடர் நிலைமை 1-1 என தற்போது மாறியுள்ளது. அடுத்த போட்டி, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச அரங்கில், 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், “இதை, அதி சிறப்பான பெறுபேறு என்று அழைக்க மாட்டேன். பிடிகளை இன்றும் தவறவிட்டோம். ஆனால், காட்டிய மனநிலையும் உணர்வும் சிறப்பானவை. வீரர்களிடமிருந்து, சிறப்பான பெறுபேறு இது. சந்தகான் சிறப்பாகச் செயற்பட்டோர், வனிதுவும் அவ்வாறு தான். 

“அவரை (வனிது) தேர்ந்தெடுத்தமைக்கு, தேர்வாளர்களுக்குப் பாராட்டுச் செல்ல வேண்டும். உண்மையாகவே, அவரை நான் அதிகளவில் பார்த்திருக்கவில்லை. 

“இவ்வாறான சிறிய எண்ணிக்கையிலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடும் போது, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தால், கடினமானது. உபுல் தரங்கவுக்கு, போதியளவு நன்றியை எங்களால் கூற முடியாது. ஏனையோருக்கு இடமளிப்பதற்காக, துடுப்பாட்ட வரிசையில் மேலும் கீழுமாக அவர் நகர்த்தப்பட்டார். அவர், துரதிர்ஷ்டவசமான வீரராவார். அவருக்கு, போதுமான நன்றியை, எங்களால் கூற முடியாது” என்று தெரிவித்தார்.   

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: இலங்கை

சிம்பாப்வே: 155/10 (33.4 ஓவ.) (துடுப்பாட்டம்: ஹமில்ட்டன் மஸகட்ஸா 41 (56), மல்கொம் வோலர் 38 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: லக்‌ஷான் சந்தகான் 10-0-52-4, வனிது ஹஸரங்க 2.4-0-15-3)

இலங்கை: 158/3 (30.1 ஓவ.) (துடுப்பாட்டம்: உபுல் தரங்க ஆ.இ 75 (86), நிரோஷன் டிக்வெல்ல 35 (54), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 28 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: டென்டாய் சத்தர 5-0-33-2).

போட்டியின் நாயகன்: லக்‌ஷான் சந்தகான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .