2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமொன்ஸ் நீக்கப்பட்டார்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாசாரம் மற்றும் உத்தி அணுகுமுறையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பில் சிமொன்ஸ் நீக்கப்பட்டுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கெதிராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவதற்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இருபதுக்கு -20 குழாம் பயணமாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே, சிமொன்ஸின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டது, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி மைக்கல் முறிஹெட்டால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணியின் பயிற்சியாளராகாவிருந்து, 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளராகப் பொறுப்பெற்ற சிமொன்ஸ், இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் வென்று, ஆறு மாதத்தில் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முகாமையாளரான, அவ்வணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஜோயல் கார்னரின் கண்காணிப்பின் கீழ் மேற்கிந்தியத் தீவுகள் அணி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவரும் இங்கிலாந்தின் கென்ற் பிராந்திய அணியின் பயிற்சியாளருமான ஜிம்மி அடம்ஸினையே, சிமொன்ஸின் பிரதியீடாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை விரும்புகின்றதாக தெரிவிக்கப்பட்டபோதும், அடம்ஸுக்கு இதில் விருப்பமில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .