Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்றுவரும் பராலிம்பிக் போட்டிகளில் சைக்கிளோட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்த வீரரொருவர், விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், பராலிம்பிக் போட்டிகளையே துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
ஈரானைச் சேர்ந்த சரப்ராஸ் பாமான் கொல்பர்நெஸாத் என்ற வீரரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 48 வயதான இவர், முழங்காலுக்குக் கீழ் உபாதைகளைக் கொண்டவர்கள் அல்லது அவயங்களை இழந்தோருக்கான பிரிவில் பங்குபற்றிக் கொண்டிருந்தார்.
றியோ டி ஜெனீரோவில் உள்ள குருமாரி என்ற மலைப்பாங்கான இடத்தில், இந்தச் சைக்கிளோட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, அவர் சைக்கிளில் மோதியுள்ளார். அந்த இடத்திலேயே அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதோடு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அம்பியூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கு வைத்தே அவர் மரணமடைந்தார்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சர்வதேச பராலிம்பிக் செயற்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் கிறெய்க் ஸ்பென்ஸ், "நாங்கள் அறிந்தவரை, பராலிம்பிக் வரலாற்றில் இவ்வாறான உயிராபத்தை ஏற்படுத்திய முதலாவது விபத்து இதுவாகும்" என்றார்.
1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பராலிம்பிக் போட்டிகள், 15ஆவது தடவையாக இம்முறை இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையில் 1980ஆம் ஆண்டுக்கும் 1988ஆட் ஆண்டுக்குமிடையில் இடம்பெற்ற போரில் பங்குபற்றிய கொல்பர்நெஸாத், 2002ஆம் ஆண்டு முதல் சைக்கிளோட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவர், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இலண்டன் பராலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாகப் பங்குபற்றியிருந்த நிலையில், இம்முறை இரண்டாவது முறையாகப் பங்குபற்றினார். இம்முறை, ஏற்கெனவே ஒரு போட்டியில் பங்குபற்றியிருந்த நிலையில், இது இரண்டாவது போட்டியாக அமைந்தது.
கொல்பர்நெஸாத்தின் மரணத்தையடுத்து, வீரர்கள் தங்கியிருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில், ஈரானியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அத்தோடு, பராலிம்பிக் செயற்குழு உறுப்பினர்கள், பராலிம்பிக் வீரர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதைத் தவிர, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை இடம்பெறவுள்ள பராலிம்பிக் நிறைவுசெய்யும் நிகழ்வில், ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago