Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, கடுமையான மழை காரணமாகக் கைவிடப்பட்டாலும், போட்டியில் முடிவொன்றைப் பெறும் வாய்ப்பை, இன்னொரு பிரச்சினையே ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் புளோரிடாவில், அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த இப்போட்டி, 10.40க்கே ஆரம்பித்தது. அப்போது, மழை பெய்திருக்கவில்லை, மைதானத்தில் ஈரலிப்புத்தன்மை இருக்கவில்லை, ஆடுகளம் தயாராக இருந்ததது, வீரர்கள் தயாராக இருந்தார்கள், ஆனால் போட்டியின் ஒளிபரப்பாளர்கள் தயாராக இருந்திருக்கவில்லை.
இந்தத் தொடரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே நடத்தும் நிலையில், புளோரிடாவில் பெறப்படும் நேரடிக்காட்சிகள், அங்கிருந்து செய்மதி மூலமாக இந்தியாவில் போட்டியை ஒளிபரப்புச் செய்யும் அலைவரிசைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், செய்மதிக்கும் புளோரிடாவில் காணப்பட்ட தயாரிப்புக்கூடத்துக்குமான தொடர்பு இல்லாமற்போனதால், போட்டியை ஆரம்பித்திருக்கவில்லை.
"தவிர்க்கமுடியாத தொழில்நுட்பப் பிரச்சினை" என்று மாத்திரமே தெரிவிக்கப்பட்ட நிலையில், 250 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை நுழைவுச்சீட்டுக்காகச் செலுத்தி, போட்டியைப் பார்க்க வந்திருந்த இரசிகர்கள், எரிச்சலடைந்தனர்.
போட்டி ஆரம்பித்து, முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஜோன்சன் சார்ள்ஸ் மாத்திரம் பிரகாசிக்க (26 பந்துகளில் 43), 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் அவ்வணி வெற்றது. பந்துவீச்சில் அமித் மிஷ்ரா 3, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிறிட் பும்ரா, மொஹமட் ஷமி மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய இந்திய அணி, 2 ஓவர்களில் 15 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் போது, மழை குறுக்கிட்டது. பின்னர், போட்டியை ஆரம்பித்திருக்க முடிந்திருக்கவில்லை. எனவே, இப்போட்டி கைவிடப்பட்டது.
முதலாவது போட்டியும் இதே மைதானத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 245 ஓட்டங்களையும் இந்திய அணி 244 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. எனவே, அதே ஆடுகளத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 143 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தமையால், அப்போட்டியில் வெற்றிபெற்று, தொடரைச் சமப்படுத்தும் வாய்ப்பு, இந்திய அணிக்குக் காணப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், டக்வேர்த் லூயிஸ் முறையில் போட்டி முடிவைப் பெறுவதற்குத் தேவையான 5 ஓவர்களை வீசுவதற்கு, போட்டி 40 நிமிடங்களால் தாமதித்து ஆரம்பித்தமை காரணமாக அமைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .