2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

முதலிடத்துக்கான கோலைப் பெற்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் தரப்படுத்தல்களின் முதலிடத்தை, கடந்த ஓகஸ்ட் மாதம் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, முதலிடத்தைப் பெற்ற அணிகளுக்கு வழங்கப்படும் டெஸ்ட் கோலைப் பெற்றுக் கொண்டுள்ளது. இந்தக் கோலை, பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக்கிடம், சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸன் வழங்கிவைத்தார். பாகிஸ்தானின் லாகூரிலுள்ள கடாபி மைதானத்தில் வைத்தே, இந்தக் கோல் கையளிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடாபி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்துக்காகச் சென்று கொண்டிருந்த போது, ஆயுததாரிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறாத நிலையில், நாட்டுக்கு வெளியே இடம்பெற்ற போட்டிகளில் காட்டிய திறமையைக் கொண்டே, முதலிடத்தைப் பெற்றிருந்தது. தற்போது, அதே மைதானத்தில் வைத்து, முதலிடத்துக்கான கோலைப் பெற்றுக் கொண்டுள்ளது.

முதலிடத்தைப் பெற்றமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மிஸ்பா உல் ஹக், "டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் இருப்பதை விட மேலானது எதுவுமில்லை. எனது வாழ்நாளில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. எனது கிரிக்கெட் வாழ்வில், மிகவும் மகிழ்ச்சியான நாள் இது. டெஸ்ட் சம்பியன்ஷிப் கோலைப் பெற்றுக் கொள்வதற்கு, பாகிஸ்தானுக்குள் வைத்து டெஸ்ட் போட்டியொன்றில் நாங்கள் இறுதியாக விளையாடிய அதே மைதானத்தை விடச் சிறந்தது எதுவுமில்லை" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த டேவிட் றிச்சர்ட்ஸன், "மார்ச் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், சொந்த நாட்டில், தங்களது சொந்த மக்களுக்கு முன்னால் விளையாட முடியாத நிலையில், டெஸ்ட் முதலிடத்தை அவர்கள் அடைந்துள்ளமை, இன்னும் சிறப்பானது" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .