Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில், விராத் கோலி பெற்றுக் கொண்ட சதமே முக்கியப்படுத்தப்பட்டாலும், இந்திய அணித்தலைவர் டோணிக்கும், முக்கியமான போட்டியாக இது அமைந்தது.
இப்போட்டியில் 80 ஓட்டங்களைக் குவித்த டோணி, தனது 22ஆவது ஓட்டத்தைப் பெற்ற போது, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9,000 ஓட்டங்களைக் கடந்த 17ஆவது வீரராக மாறினார். அத்தோடு, அந்த மைல்கல்லை வேகமாக அடைந்த 6ஆவது வீராகவும் அவர் மாறினார்.
இதில் முக்கியமாக, அவரது வழக்கமான 5ஆம், 6ஆம் இலக்கத்தில் களமிறங்காது, 4ஆம் இலக்கத்தில் களமிறங்கிய அவர், அடித்தாடி ஓட்டங்களைப் பெற்றார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டோணி, 5ஆம், 6ஆம் இலக்கங்களில் களமிறங்கும் போது, போட்டி நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஆட வேண்டியிருப்பதால், ஆக்ரோஷமாக ஆட முடியாமல் இருப்பதாகவும், எனவே அவ்வாறு விளையாடுவதன் காரணமாக, தனது துடுப்பாட்டத் திறன் ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதன் மூலமாக, அழுத்தங்களின்றி விளையாட முடிவதாகக் குறிப்பிடும் அவர், இளைய வீரர்கள், பின்வரிசையில் விளையாடி, போட்டிகளை முடிக்கும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியுமெனக் குறிப்பிட்டார்.
இப்போட்டியில், தனது 26ஆவது சதத்தைப் பெற்ற விராத் கோலி, இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்திருந்தார். அவர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டோணி, "இந்தியாவை கோலி, பெருமைப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான 4ஆவது போட்டி, நாளை மறுதினம் புதன்கிழமை, ராஞ்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago