2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மோர்கன், ஹேல்ஸ் மீள இணைப்பு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில், அணித் தலைவர்ஒய்ன் மோர்கன், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் டெஸ்ட் தொடரின் பின்னர் இடம்பெறவுள்ள இந்தத் தொடர், ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு முன்னர் பங்களாதேஷில் இடம்பெற்ற தொடரில், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, மோர்கன், ஹேல்ஸ் இருவரும் அத்தொடரிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே, தற்போது இத்தொடரில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்தத் தொடரில், ஜோ றூட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, பென் டக்கெட் விளையாடியிருந்தார். அவர், 3 இனிங்ஸ்களில் 2 அரைச்சதங்களைப் பெற்றிருந்தார். ஆனால், றூட், மோர்கன், ஹேல்ஸ் ஆகியோர் மீளத் திரும்பும் நிலையில், டக்கெட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல், பங்களாதேஷ் தொடரில் பிரகாசிக்கத் தவறிய ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்படவில்லை. அத்தொடருக்கான குழாமில் இடம்பெற்ற போதிலும், அதில் விளையாடியிருக்காத ஸ்டீவன் ஃபின்னும் இத்தொடரில் சேர்க்கப்படவில்லை.

அந்தத் தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்துக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒ.நா.ச.போட்டிக் குழாம்: ஒய்ன் மோர்கன், மொய்ன் அலி, ஜொனதன் பெயர்ஸ்டோ, ஜேக் போல், சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், லியம் டொவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கட், அடில் றஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.

இ-20 தொடர்: ஒய்ன் மோர்கன், மொய்ன் அலி, ஜேக் போல், சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், லியம் டொவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், டைமல் மில்ஸ், லியம் பிளங்கட், அடில் றஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .