2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மில்லர் அதிரடி; தென்னாபிரிக்கா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில், டேவிட் மில்லரின் அதிரடியான சதத்தின் உதவியுடன், தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி கிடைத்தது.

டேர்பனிலுள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி அவ்வணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் தனது 8ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தைப் பெற்ற டேவிட் வோணர், 107 பந்துகளில் 117 ஓட்டங்களைப் பெற்றார். தனது 6ஆவது சதத்தைப் பெற்ற தலைவர் ஸ்டீவன் ஸ்மித், 107 பந்துகளில் 108 ஓட்டங்களைப் பெற்றார். தவிர ஆரொன் ஃபின்ச் 53 (34), ட்ரவிஸ் ஹெட் 35 (18), ஜோர்ஜ் பெய்லி 28 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், டேல் ஸ்டெய்ன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

372 ஓட்டங்கள் என்ற மிகவும் சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி,  49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை தென்னாபிரிக்காக அடைந்தது. தனது 3ஆவது சதத்தைப் பதிந்த டேவிட் மில்லர், 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, குயின்டன் டீ கொக் 70 (49), ஹஷிம் அம்லா 45 (30), அன்டிலி ஃபெக்லுவாயோ ஆட்டமிழக்காமல் 42 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜோன் ஹேஸ்டிங்ஸ், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, டேவிட் மில்லர் தெரிவானதோடு, 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை, 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னணி வகிப்பதோடு, தொடர் வெற்றி, அவ்வணிக்கே எனவும் உறுதியாகியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .