2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: அமெரிக்க நீச்சல் வீரர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்று வரும் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோ நகரத்தின் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் பயணிக்கவிருந்த ஐக்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரர்களான கூனர் பென்ஸ், ஜக் கொங்கர் ஆகியோர் பிரேஸிலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதை ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் செயற்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு பறக்கவிருந்த விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மேற்கூறப்பட்ட இரண்டு வீரர்களும், பிரேஸிலிய உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (17) இரவு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் சில மணித்தியாலங்களில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் சக நீச்சல் வீரர்களான றயான் லொட்டி, ஜேம்ஸ் ஃபைஜன் ஆகியோரும் பிரேஸிலை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதும். ஏற்கெனவே, றயான் லொட்டி பிரேஸிலை விட்டு வெளியேறியுள்ளார்.

றியோ டி ஜெனீரோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) தாம் கொள்ளையிடப்பட்டதாக கூறியது தொடர்பிலேயே குறித்த நீச்சல் வீரர்களை பொலிஸார் விசாரித்துள்ளனர்.

தாங்கள் துப்பாக்கி முனையில் வைத்து றியோ டி ஜெனீரோவில் கொள்ளையிடப்பட்டதாக குறித்த நான்கு நீச்சல் வீரர்களும் தெரிவித்திருந்த நிலையில், ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைந்த போது குறித்த நீச்சல் வீரர்கள் தெரிவித்த கருத்துக்களும் கண்காணிப்புக் கமெராக்களும் ஒத்துப் போகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீச்சல் வீரர்களுக்கு என்ன இடம்பெற்றது என்பது ஆரம்பம் முதலே குழப்பமாகவே காணப்பட்டது. குறித்த சம்பவம் குறித்து அமெரிக்க தொலைக்காட்சி அலைவரிசையான என்.பி.சிக்கு முதலில் லொட்டி தெரிவித்திருந்த நிலையில், கொள்ளை தொடர்பான அறிக்கைகள் பொய்யானவை என சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு பேச்சாளர் மார்க் அடம்ஸ் தெரிவித்திருந்தார். பின்னர், லொட்டி தெரிவித்ததை ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் செயற்குழு உறுதிப்படுத்திருந்தது.

தானும் தனது சக அணி வீரர்களான ஃபைஜன், பென்ஸ், கொங்கர் ஆகியோர் பிரெஞ் ஒலிம்பிக் அணியின் வரவேற்பு வீட்டில் சனிக்கிழமை மாலை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக பொலிஸாரிடம் தெரிவித்த லொட்டி, தாங்கள் ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்பும் வழியில், தங்களது வாடகைக் கார், துப்பாக்கிதாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவரது பணமும் தனிப்பட்ட உடமைகளும் கொள்ளையிடப்பட்டதாக கூறியிருந்தார்.

எனினும், குறித்த சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸார், கொள்ளைக்கான எந்தவித ஆதாரங்களையும் தாங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் லொட்டியின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். எத்தனை பேர் கொள்ளையிட்டனர் என்பது தொடர்பில் ஃபைஜனும் லொட்டியும் வேறுபட்ட எண்ணிக்கையைத்  தெரிவித்திருந்தனர்.

அதிகாலை நான்கு மணிக்கு ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்பியதாக லொட்டியும் ஃபைஜனும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்த நிலையில், கண்காணிப்புக் கமெராக்களில், அவர்கள் காலை ஏழு மணிக்கு ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்புவது தெரிந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .