Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோவினதும் நட்சத்திர வீரருமான நேமர், ஒலிம்பிக் கால்பந்தாட்ட வரலாற்றில் அதிவேகமான கோலைப் பெற, றியோ ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் நாடான பிரேஸில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அரையிறுதிப் போட்டியில் கத்துக் குட்டி அணியான ஹொண்டூரஸை 6-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது. நேமர், மன்செஸ்டர் சிற்றியினால் 35 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கப்ரியல் ஜீஸஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்ததோடு, மர்க்கினோஸ், லுவான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.
ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு, 1984ஆம் ஆண்டு, 1988 ஆண்டு, இறுதியாக 2012ஆம் இலண்டன் என மூன்று தடவை பிரேஸில் தகுதி பெற்றபோதும் ஒருபோதும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கில், நேமரை உள்ளடக்கிய பிரேஸில் அணி, இறுதிப் போட்டியில் மெக்ஸிக்கோவிடம் தோல்வியுற்றிருந்தது.
இதேவேளை, மற்றைய அரையிறுதிப் போட்டியில், உலக சம்பியன்களான ஜேர்மனி, 2-0 என்ற கோல்கணக்கில் நைஜீரியாவைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது. ஜேர்மனி சார்பாக லூகாஸ் குளோஸ்டர் மன், நில்ஸ் பீற்றர்சன் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.
பிரேஸில், ஜேர்மனி அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 7-1 என்று ஜேர்மனியிடம் மரண அடி வாங்கிய பிரேஸில் பழி தீர்க்கக் காத்திருக்கிறது.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026