2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

றியல் மட்ரிட்டிலேயே எதிர்காலம்: பேல்

Editorial   / 2017 ஜூன் 06 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில், தான் மகிழ்ச்சியாகவுள்ளதாகவும், றியல் மட்ரிட்டிலேயே தனது எதிர்காலம் உள்ளதாகவும், றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரர் கரித் பேல் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு வரையில், றியல் மட்ரிட்டுடன் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள பேல், றியல் மட்ரிட்டிலிருந்து விலகி, மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்லவுள்ளதாக, அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள பேல், “நாங்கள் கிண்ணங்களை வெல்கிறோம். நான் மகிழ்ச்சியாக உள்ளேன். மட்ரிட்டில், நீண்ட கால ஒப்பந்தமொன்றை நான் கைச்சாத்திட்டுள்ளேன். எனது குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது, நான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆகவே, ஆம். நாங்கள் இப்போது செய்வதை நாங்கள் தொடருவோம்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் கழகமாக டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்னாள் வீரரான பேல், உலக சாதனைத் தொகையாக, 85 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, 2013ஆம் ஆண்டில் றியல் மட்ரிட்டில் இணைந்திருந்தார்.

இந்நிலையில், மேலும் கருத்துத் தெரிவித்த பேல், கிண்ணங்களை வெல்லுவதற்காகவே, தான் றியல் மட்ரிட்டுக்கு வந்ததாகவும், தற்போது அவற்றை வெல்லுவதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஆகவே, தொடர்ந்து நாங்கள் இதனைச் செய்வோம் என்று கூறியுள்ளார்.

கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டபோதும், தனது சொந்த நகரமான கார்டிப்பில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் விளையாடுவதில் உறுதியாயிருந்த பேல், போட்டியின் 77ஆவது நிமிடத்தில், மாற்று வீரராகக் களமிறங்கியிருந்தார்.

கடந்தாண்டு நவம்பரில், சத்திர சிகிச்சையொன்றுக்கு உள்ளாகிய பேல், சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் விளையாடியிருக்காவிட்டால், இரண்டாவது சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .