2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

லீமனின் ஒப்பந்தம் நீடிப்பு

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமனின் பயிற்றுநர் பதவிக்கான ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், ஆஷஸ் தொடர் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட டெரன் லீமன், 2019ஆம் ஆண்டுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்குச் சில நாட்கள் முன்பாக, அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக அறிவிக்கப்பட்ட டெரன் லீமன், அடுத்ததாக இடம்பெற்ற ஆஷஸ் தொடரை வென்றதோடு, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றிருந்தார். அத்தோடு, கடந்தாண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்திலும் அவுஸ்திரேலிய அணி, சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

அவரது ஒப்பந்தம், அடுத்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையிலேயே, தற்போது அவரது ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் வீரர்களும், தன் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கை குறித்து மகிழ்வடைவதாகத் தெரிவித்த அவர், தான் செய்துவரும் பணியை, மிகவும் விரும்புவதாகவும் உலகிலுள்ள மிகச்சிறந்த பணி அதுவென எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டே அவரது ஒப்பந்தம் காலாவதியாகவிருந்த நிலையில், தற்போது அது நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடர், உலகக் கிண்ணம் ஆகியவற்றில், நிலையான அணியொன்றை உருவாக்கும் நோக்கிலேயே இந்த ஒப்பந்த நீட்டிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .