2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

லா லிகா:சமநிலையில் முடிவடைந்த ‘எல் கிளாசிகோ’

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டியொன்றில் பரமவைரிகளான றியல் மட்ரிட்டும் பார்சிலோனாவும் பார்சிலோனா அணியின் மைதானமான கம்ப் நொவ்வில் மோதின.

எல் கிளாசிகோ என்றழைக்கப்படும், றியல் மட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் முதற்பாதியில், இரண்டு அணிகளினதும் பின்கள வீரர்கள் சிறப்பாகச் செயற்பட, இரண்டு அணிகளது தாக்குதல் ஆட்ட வீரர்களினாலும் கோல் பெறும் முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை.

லியனல் மெஸ்ஸியால் அடிக்கப்பட்ட “பிறீ கிக்” ஒன்றை றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸினால் தடுக்கப்பட்டதே, முதற்பாதியில் பார்சிலோனாவால் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு கோல் பெறும் முயற்சியாக இருந்தது.

மறுபக்கம், உபாதையிலிருந்து கரித் பேல் மீண்டு வருகின்ற நிலையில், தனித்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல் பெறுவதற்கான மூன்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். றியல் மட்ரிட்டின் மத்திய களத்தில் லூக்கா மோட்ரிக் சிறப்பாகச் செயற்பட்டிருந்ததுடன், பின்களத்தில் ரஃபேல் வரானே சிறப்பான தடுப்புகளை மேற்கொண்டிருந்தார்.

இரண்டாவது பாதியில் சிறப்பாகச் செயற்பட்ட பார்சிலோனா, முதலாவது பாதியை விட அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையிலேயே, கிடைக்கப்பெற்ற “பிறீ கிக்” ஒன்றை கோல்கம்பத்தை நோக்கி நேமர் அடிக்க, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து லூயிஸ் சுவாரஸ் தலையால் முட்டிக் கோலாக்க, போட்டியின் 53ஆவது நிமிடத்தில் பார்சிலோனா முன்னிலை பெற்றது.

மேற்படி கோலுடன் பார்சிலோனா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகையில், போட்டியின் இறுதி நிமிடங்களில், கோல் பெறுவதற்கான வாய்ப்பொன்றை கிறிஸ்டியானோ ரொனால்டோ மயிரிழையில் தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில், முக்கியமான போட்டிகளில், போட்டி முடிவடையும் தருணங்களில் கோல்களைப் பெறும் றியல் மட்ரிட் அணியின் தலைவர் சேர்ஜியோ றாமோஸ், போட்டியின் மேலதிக நேரத்தில் கோலொன்றைப் பெற, போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லூக்கா மோட்ரிக்கின் “பிறீ கிக்” ஒன்றை தலையால் முட்டியே றாமோஸ் கோலைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், இப்போட்டியுடன் சேர்த்து, கடந்த 33 போட்டிகளில் றியல் மட்ரிட் வெல்லப்படாத அணியாக விளங்குகிறது. தவிர, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 34 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ள றியல் மட்ரிட், இரண்டாமிடத்திலுள்ள பார்சிலோனாவை விட ஆறு புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .