2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வென்று இரண்டாமிடத்துக்குச் சென்றது லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றிபெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியது.

லிவர்பூல், 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியைத் தோற்கடித்து, பிறீமியர் லீக்கில், தமது அன்பீல்ட் மைதானத்தில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இப்பருவகாலத்தில் தொடர்கிறது.

லிவர்பூலின் பின்கள தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் முகமாக ஸ்டோக் சிற்றியின் ஜோன் வோல்ட்டேர்ஸ், போட்டியின் 12ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலொன்றைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.

அதன்பின்னர், ஸ்டோக் சிற்றியின் கோல் கம்ப எல்லையிலிருந்து ஆறு யார் தூரத்திலுள்ள பெட்டிக்குள், முன்னாள் லிவர்பூல் வீரரான கிளென் ஜோன்சன் பந்தொன்றை வெளியேறத் தவற, போட்டியின் 34ஆவது நிமிடத்தில் அடம் லலானா பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கையை லிவர்பூல் சமப்படுத்தியது.

அதன்பின்னர், போட்டியின் முதற்பாதி முடிவடைய, எவராலும் கவனிக்கப்படாமல் இருந்த ரொபேர்ட்டோ பேர்மினோ பெற்ற கோலின் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டியின் இரண்டாவது பாதியில், டிவோக் ஒரிஜியின் உதையை, தமது கோல்கம்பத்துக்குள்ளேயே ஜியனனெல்லி இம்புலா புகுத்த, 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற லிவர்பூல், போட்டியின் 70ஆவது நிமிடத்தில், இப்பருவகாலத்தில் தனது முதலாவது கோலை டேனியல் ஸ்‌டரிட்ஜ் பெற்றதோடு, 4-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 40 புள்ளிகளைப் பெற்று, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ள லிவர்பூல், முதலாமிடத்திலுள்ள செல்சியை விட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. லிவர்பூலை விட ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி மூன்றாமிடத்தில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .