Gopikrishna Kanagalingam / 2016 நவம்பர் 02 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றுக் கொண்டது. ஆனால் சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர், நாயகனாக மிளிர்ந்தார்.
ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியின் 4ஆவது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களுடன் காணப்பட்ட இலங்கை அணி, அத்துடன் தமது இனிங்ஸை இடைநிறுத்தி, சிம்பாப்வே அணிக்கு 412 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிம்பாப்வே அணி, ஆரம்பத்திலிருந்து மெதுவாக, பொறுமையாக விளையாடியது. முதலாவது விக்கெட்டுக்காக 16.4 ஓவர்களில் 31 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, பின்னர் 29 ஓவர்களில் 68 ஓட்டங்களுடன், வெற்றி - தோல்வியற்ற நிலைக்குப் போராடும் நிலையை ஆரம்பித்தது.
ஆனால், பகல்நேர உணவுநேரத்துக்குச் சற்று முன்பதாகத் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்கள் என்ற நிலையை அடைந்தது. பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அணித்தலைவர் கிறேம் கிறீமரின் பொறுமையான துடுப்பாட்டத்தால் போராடியது. 43 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, 7ஆவது விக்கெட்டுக்காக 19.4 ஓவர்களும், 8ஆவது விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களும் 9ஆவது விக்கெட்டுக்காக 19.3 ஓவர்களும், இணைப்பாட்டம் புரியப்பட்டது. எனினும், போட்டி முடிவதற்கு 10.5 ஓவர்கள் மாத்திரமே காணப்பட்ட போது, 143 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பொறுமையாகப் பெற்றிருந்த கிறேம் கிறீமர், இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சை அடித்தாட முயன்று, ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதன் பின்னர், 8.3 ஓவர்கள் மீதமிருக்கையில், இலங்கை அணியின் வெற்றி பெறப்பட்டது.
இலங்கை அணியின் வழக்கமான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், வழக்கமான உப தலைவர் டினேஷ் சந்திமால் ஆகியோருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக, முதன்முறையாக அணித்தலைமைப் பொறுப்பை ஏற்ற ஹேரத், தனது முதலாவது போட்டியிலேயே வெற்றியைப் பெற்றார். ஆனால், பலம் குறைந்த சிம்பாப்வே அணிக்கெதிராக, மிகவும் போராடியே, இந்த வெற்றியைப் பெறக்கூடியதாக அமைந்தது.
இந்தப் போட்டியில், 2,491 பந்துகள் வீசப்பட்டன. இது, இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், அதிக பந்துகள் வீசப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும். 1994ஆம் ஆண்டு, வெற்றி - தோல்வியுற்று முடிவடைந்த போட்டியில் வீசப்பட்ட 2,578 பந்துகளே, இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் அதிக பந்துகள் வீசப்பட்ட சந்தர்ப்பமாக உள்ளது.

இப்போட்டியின் நாயகனாக, சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி, அணிக்காகப் போராடிய, சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர் தெரிவானார். இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் 145 ஓட்டங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago