2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வலென்சியாவை வென்றது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகாதொடரின் நேற்றுச் சனிக்கிழமை (22) இடம்பெற்ற, பார்சிலோனா, வலென்சியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஒரு கோல் பின்தங்கியிருந்து, மேலதிக நேரத்தில் கிடைக்கப் பெற்ற பெனால்டியில், மெஸ்ஸி பெற்ற கோலின் காரணமாக, பார்சிலோனா வென்றது.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில், சர்ச்சைக்குரிய விதத்தில் கோலொன்றினைப் பெற்ற மெஸ்ஸி, பார்சிலோனாவுக்கு முன்னிலையை வழங்கினார். மெஸ்ஸி, இக்கோலைப் பெறும்போது, லூயிஸ் சுவாரஸ் “ஓஃப் சைட்”-இல் நின்றதுடன், மெஸ்ஸி பந்தை அடிக்கும்போது, அவ்வுதைக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் பாய்ந்திருந்தார்.  கால்பந்தாட்ட விதிகளின்படி, எதிரணி வீரர் பந்தை விளையாடுவதற்கான பார்வையை தடுத்தால், அது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், பார்சிலோனாவிலிருந்து வலென்சியாவுக்கு கடனாக வழங்கப்பட்ட முனிர் எல் ஹாடாடி மற்றும் றொட்ரிகோ பெற்ற கோல்களின் மூலமாக, 2-1 என்ற கோல் கணக்கில் வலென்சியா முன்னிலை பெற்றது. எனினும், சுவாரஸ் ஒரு கோலினைப் பெற்றதுடன், மேலதிக நேரத்தில், ஒரு பெனால்டியையும் பெற்றுக் கொடுத்தார். அப்பெனால்டியை மெஸ்ஸி கோலாக்க, 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது.

மெஸ்ஸி பெற்ற மேற்படி வெற்றிக் கோலை, பார்சிலோனா வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, வலென்சியா ஆதரவாளர்களினால், அவர்கள் மீது போத்தல்கள் வீசப்பட்டிருந்தன. அவை, நேமர், சுவாரஸை தாக்கியிருந்த நிலையில், பார்வையாளர்களிடம் மெஸ்ஸி கோபமடைந்திருந்தார்.

இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில், என்ஸோ பெரேஸினால் காயப்படுத்தப்பட்ட, பார்சிலோனா அணியின் தலைவரும் மத்தியகள வீரருமான அன்ரே இனியஸ்டா, ஆறு தொடக்கம் எட்டு வாரங்களுக்கு, போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்படுகிறது. இனியஸ்டா, முழங்கால் தசைநாணில் காயமடைந்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .