2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'மட்டக்களப்பில் ஐ.தே.க. 3 ஆசனங்களை கைப்பற்றும்'

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று ஆசனங்களை கைப்பற்றுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான அரசரட்ணம் சசிதரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'இவ் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிப்பதற்கு தயாராகிவிட்டனர்.  மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலமானது இந்நாட்டு மக்களுக்கு இருண்ட காலமாகும். நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான முதற்படியாக ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்று கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்றுவதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மூன்று ஆசனங்களை கைப்பற்றும்.இந்நாட்டு அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் இன்று வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நாளுக்குநாள் விலையேற்றம் ஏற்பட்டு இந்நாட்டில் ஏழைகள், மத்திய தரத்திலுள்ள மக்கள் வசிக்கமுடியாதொரு சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை கிழக்கு மாகாண மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தி தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பல உயிரிழப்புக்களையும் பல சொத்து இழப்புக்களையும் நாம் சந்தித்துள்ளோம்.  ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியாகவுள்ளது. இன்று மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கின்றனர். இந்நாட்டின் அடக்கு முறைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென மக்கள் ஆயத்தமாகவுள்ளனர்.

எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .