2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

'கிழக்கு மீட்கப்பட்ட பின் 300 தமிழர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்'

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் விடுவித்த பின்னர் இங்கு 300 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்,  யுவதிகள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் அறிவூட்டும் நிகழ்வொன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்கம் விடுவித்த பின்னர் 300 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? இவ்வாறு மட்டக்களப்பில் கடத்தப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் அடங்கிய விபரங்களை நாங்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். யார் இவர்களை கடத்தினார்கள், கொலை செய்தார்கள் என்பன போன்ற விபரங்களையும் அதில் தெரிவித்திருந்தோம் இன்னும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்  அறிக்கையானது அரசாங்கப் படைகளை பாதுகாப்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை போன்றே உள்ளது. ஏனெனில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் 9:8 பகுதியில் சொல்லப்பட்ட விடயங்கள் இராணுவத்தை பாதுகாப்பதற்காக சொல்லப்பட்ட விடயங்களாகவே உள்ளன.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் மாற்றப்பட்டு இன்னும் சிறைகளிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளனர். இந்த விடயத்தில் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ள பரிந்துரைகளுக்கு என்ன நடந்தது என நான் கேட்க விரும்புகின்றேன்.

சம்பூர் மக்கள், கிளிவெட்டியில் உள்ள அகதி முகாமில் இன்னமும் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சரியான உணவுகள் கூட வழங்கப்படுவதில்லை.

சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்றுவருகின்றது. இந்த சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிப்பது போன்ற பரிந்துரையும் இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் சமவாய்ப்பு இல்லாமையால்தான் ஆரம்பத்தில் போராட்டம் வெடித்தது. ஆனால் அதற்கான அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று சரியாக அமுல்படுத்தப்படவில்லை.

இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்கமுடியாதுள்ளது. அதேநேரம் சில விடயங்களை வரவேற்கின்றோம்.  அடுத்த மார்ச் மாதம் இந்த விவகாரம் மீண்டும் ஜெனீவாவில் பேசப்படவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான விடயங்களையாவது நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படல் வேண்டும் என்பதை அமைச்சர் ஜோன் செனவிரட்னவிடம் நாம் வலியுறுத்தியபோது,  அவர் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு அனுமதி வழங்கினார். இதை அடுத்து மட்டக்களப்பில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வருகின்றது.  எனினும் மட்டக்களப்புக்கு அமைச்சர்கள் வரும்போது சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்படுகின்றது.  சிங்களத்தில் தேசிய கீதத்தை பாடுமாறு மாணவர்கள் அதிகாரிகளினால் பணிக்கப்படுகின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .