2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு 3.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2014 மே 04 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


பொது சன மாதாந்த உதவித் தொகையாக இவ்வருடம் 840 பேருக்கு 3.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூர் நகர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமூகப் பராமரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை(2) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சமூகப் பராமரிப்பு நிலையம் என்பது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒரு வேலைத் திட்டம். இதனூடாக சமூகத்தில் நலிவுற்றிருக்கின்ற பலதரப்பட்ட மக்களுக்கான சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குவதுதான்  இந்த பராமரிப்பு நிலையம் எனும் கருப்பொருளின் நோக்கம்.

இந்தத் திட்டத்தின் மூலம் சமூக சேவைத் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு குழுவாக இயங்க முடியும்.
இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் சிறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழு பேருக்கு தலா 60 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளோம்.

கடந்த ஆண்டு சமூக சேவைத் தினைக்களம் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் சுயதொழிலுக்காக 37 பேருக்கு 7 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கொடுப்பனவுகளையும் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவாக  840 பயனாளிகளுக்கு 23 இலட்ச ரூபாவையும், கசம், தொழுநோய், புற்று நோய் போன்றவற்றிற்கு 70 ஆயிரம் ரூபாவையும் வழங்கியிருக்கின்றோம்.

வலது குறைந்தவர்களுக்காக 8 சக்கர நாற்காலிகள், ஒரு ஊன்று கோல், 4 செவிப்புலன் கருவிகளையும் இந்தப் பிரதேச மக்களுக்காக வழங்கியிருக்கின்றோம். மொத்தமாக 3.2 மில்லியன் ரூபாத் தொகை வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டு 840 பொதுசன மாதாந்த உதவு தொகையாக 3.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நலிவுற்றோருக்கு உதவ நாம் என்றும் தயாராகவே உள்ளோம். இந்த சமூகப் பராமரிப்பு நிலையத்தினூடான எதிர்வரும் காலங்களில் நலிவுற்ற மக்களுக்கான உதவிகள் சென்றடைய வேண்டும்.  இதற்கு பிரதேச செயலக மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

ஏறாவூரில் திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையம் சுமார் 40 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது"  என்றும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X