.jpg)
(எம்.சுக்ரி,கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 6 சிறைக்கைதிகள் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள பேரின சமூகத்தைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரிகளை மாற்றி தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் சிறைக்கைதிகளுக்கான உணவு சரியாக வழங்க வேண்டுமெனவும் சிறைக்கைதிகளின் மருத்துவ விடயங்களில் முழு அக்கறை செலுத்த வேண்டுமெனவும் கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்ற சிறைக்கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின், இது சாகும் வரையிலான உண்ணாவிரதமாக தொடருமென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதியொருவர் கூறினார்.
இதுவரைகாலமும் பின்பற்றப்படாமலிருந்த சில நடைமுறைகளை பின்பற்றுமாறு அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினரால் கடந்த வாரம் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மட்டக்களப்புச் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒவ்வொரு பிரிவாகச் சென்று உணவை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நேற்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்த ஜி பிரிவிலுள்ள சுமார் 35 பேர் தங்களது இருப்பிடங்களுக்கு கொண்டுவந்து உணவை தரவேண்டுமெனக் கூறி நேற்று ஞாயிற்றுக்கிழமை உணவை பெற்றுக்கொள்ளவில்லை. இவர்களில் 6 பேர் இன்று காலையிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்ற கைதிகளுடன் சிறைச்சாலை அதிகாரிகள் சுமூகமாக பேசியும் அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லையெனவும் அவ் அதிகாரி கூறினார். படங்கள்:- ரி.லோஹித்
.jpg)